1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.02.23 , 2013.02.24 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் பாரியளவில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் கலந்துரையாடுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் முன்னர் தோல்வியடைந்திருந்தன. இந்நிலையில் 2012ஆம் ஆண்டு பங்குனிமாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான விடயங்களை விவாதிப்பதற்கான பொறிமுறையினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியது. இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் படுகொலைகளுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்த இப்பிரேரணை உண்மைகளைக் கண்டறிதல் என்பவற்றிற்குப் புறம்பாகத் தென்னாசியப் பிராந்தியத்தில் தனக்கிருக்கக் கூடிய நலன்களைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்ததொரு பிரேரனையா என்றதொரு சந்தேகம் உள்ளது.

நல்லிணக்கமும் பொறுப்புக் கூறுதலும்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, ஐக்கியநாடுகள் சபை நிபுணர்குழுவின் அறிக்கை ஆகிய இரண்டையும் பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழமையான நிகழ்ச்சி நிரலுக்குள் இவ்விடயத்தினைக் கொண்டுவருவதற்கும், கலந்துரையாடுவதற்குமான சந்தர்ப்பத்தினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியது. இதன்வழி இலங்கையின் நல்லிணக்கத்தினை முன்னேற்றுவதும் பொறுப்புக்கூறுதலும் (Promoting Reconciliation and Accountability in Sri Lanka) தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பயனுடைய சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறும், பொருத்தமான சட்டக் கட்டமைப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறும், எல்லா இலங்கையர்களுக்குமான நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல், சமத்துவம், நீதி போன்றவற்றை உறுதிப்படுத்தக்கூடிய அர்பணிப்புள்ள, நம்பகத்தன்மைவாய்ந்த சுதந்திரமான செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறும் இலங்கையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இவைகளுக்காக இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவது ஊக்குவிக்கப்படுவதுடன், வழங்கப்பட்ட ஆலோசனைகள், உதவிகள் தொடர்பான அறிக்கையினை நிகழவிருக்கும் இருபத்திரெண்டாவது கூட்டத்தொடரின்போது சமர்பிக்குமாறும் ஆணையாளர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

கற்றுக் கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நீதி, சமத்துவம், பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கம் என்பவற்றை அடைவதற்கான முதற்படியாக ஜெனிவாத் தீர்மானம் கருதியது. ஆகவே கற்றுக் கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டம் (Action Plan) ஒன்றை ஜெனிவாத் தீர்மானம் கோரி நின்றது. மேலும் இலங்கை அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்களும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதனூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்ற முடியும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. இன்னுமொரு வகையில் கூறின் இறுதி யுத்தத்தின் போது வன்னியில் கொல்லப்பட்டதாகக் நம்பப்படும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய செயல்திட்டம் உருவாக்கப்படல் வேண்டும் என்பதேயாகும்.

இலங்கையின் பரப்புரை

மனித உரிமை தொடர்பான தீர்மானங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் சர்வதேசளவில் பாரிய ஆதரவினைக் கோரி இராஜதந்திர வழியில் செயற்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து சமாதானம், நல்லிணக்கம் என்பவற்றில் தெளிவான முன்னேற்றத்தைக் காண்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதே இலங்கையின் இராஜதந்திர ரீதியிலான சர்வதேச ஆதரவுப் பிரச்சாரத்திற்கான கருப்பொருளாக இருந்தது.

உண்மையில் இலங்கை அரசாங்கத்தின் இக்கருத்தானது பாசாங்குமிக்கதாகவும் மிகவும் போலித்தனமானதாகவுமே சர்வதேச நாடுகளால் நோக்கப்பட்டது. மறுபக்கத்தில் இலங்கை அரசாங்கத்தின் இறுதி யுத்த வெற்றியானது சிங்கள, பௌத்த தேசிய வாதத்தின் மீள் எழுச்சியாகவும், வெற்றியாகவுமே உள்நாட்டுமட்டத்தில் நோக்கப்பட்டது. இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அரசியல், பொருளாதார ஆதிக்கமிக்க சிங்கள, பௌத்த உயர் குழாமினர் இதனை தமது வெற்றியாகவே கருதியிருந்தனர்.

சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து இலங்கையில் வாழும் தமிழ் சிறுபாண்மையின மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்குரிய அரசியல் நிறுவனங்களை உருவாக்குவதற்கு இதுவரை எந்தவொரு அரசாங்கமும் முயற்சிக்கவில்லை. பதிலாகத் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் இராணுவக் கட்டமைப்பினை தொடர்ந்து பேணுவதும், பலப்படுத்துவதனூடாகத் தமிழ் மக்களை அடக்குமுறைக்குள்ளாக்கவே முயலுகின்றது எனலாம்.

இலங்கையின் இப்பரப்புரைகளுக்கு மத்தியிலும் இலங்கைக்கு எதிரான ஜேனிவாத் தீர்மானத்திற்கு ஆதரவாக இருபத்திநான்கு நாடுகள் வாக்களித்திருந்தன. பதினைந்துநாடுகள் எதிர்த்து வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்தியா இதற்கு ஆதரவாக வாக்களித்ததுடன் சீனா, ரஸ்சியா ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. வாக்களிப்பின் பின்னர் கிளாறி கிளிண்டன் கருத்துத் தெரிவிக்கையில் “உண்மையான நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதலினூடாக மட்டுமே இறுதி சமாதானத்தை இலங்கையில் அடைந்து கொள்ள முடியும் என்ற செய்தியினை பலமான நம்பிக்கையுடன் சர்வதேச சமுதாயத்துடன் ஒன்றிணைந்து இலங்கைக்கு நாம் அனுப்பியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இலக்கு

இலங்கைத் தமிழ் மக்கள் மீது ஐக்கிய அமெரிக்காவிற்கு ஏன் இவ்வளவு அக்கறை? அல்லது இலங்கை மீது ஐக்கிய அமெரிக்காவிற்கு ஏன் கடுமையான கோபம்? போன்ற வினாக்களுக்கு விடைதேடவேண்டும். ஈரான், ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் ஐக்கிய அமெரிக்கா மேற்கொண்ட படுகொலைகளுக்கு இதுவரை யாரும் பொறுப்புக் கூறவில்லை. பொறுப்புக் கூறம்படி யாரையும் யாரும் கேட்கவுமில்லை. இந்நிலையில் இலங்கையில் நடந்த யுத்தப்படுகொலைகளை மனித உரிமை மீறல் என்ற பெயரில் ஐக்கிய அமெரிக்கா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் மீது யுத்தக் குற்றங்களைச் சுமத்தி உலகத்தினையும்,தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்ற தந்திரோபாய விளையாட்டில் ஐக்கிய அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. உண்மையில் ஐக்கிய அமெரிக்காவின் பிரதான இலக்கு இலங்கையில் ஆழமாக வேரூன்றி வளரும் சீனாவின் செல்வாக்கினை இறுதியுத்தத்தின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல் என்ற துரும்பினை பிரயோகித்து இல்லாதொழிப்பதேயாகும்.

சீனா பாரிய பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை இறுதி யுத்த காலத்திலும், யுத்தத்திற்குப் பின்னரும் இலங்கைக்கு வழங்கிவருகின்றது. 2012ஆம் ஆண்டு ஆவணிமாதம் 29ஆம் திகதி ஐந்து நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியங் குவாங்லி (Liang Guanglie) இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும். இதன்போது அவருடன் இணைந்து 23 உயர் அதிகாரிகள் வருகை தந்திருந்தார்கள். இலங்கை மீது சீனாவிற்குள்ள உச்சமட்ட நலன்களை எடுத்துக்காட்டும் நிகழ்வாகவே இதனைச் சர்வதேச இராஜதந்திரிகள் கருதியிருந்தனர். இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளருக்கும், சீனாவின் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் 'இலங்கையும், சீனாவும் இருநாட்டு இராணுவ உறவுகளை இறுக்கமாகப் பலப்படுத்துவதற்கு இது பரஸ்பரம் உதவும்” எனக் கூறப்பட்டது. சில நாட்களின் பின்னர் கம்யூனிச கட்சி சிரேஸ்ட தலைவர் வு பிங்கோ (Wu Bingguo) இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையுடன் வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதன் மூலம் இலங்கைக்கான சீனாவின் உதவியையும், முதலீட்டினையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் ஆழமாக வேரூன்றி வளரும் சீனாவின் செல்வாக்கினால் ஐக்கிய அமெரிக்காவுடன் பலமான தந்திரோபாயப் பங்காளி உறவினைப் பேண வேண்டிய சர்வதேசச் சூழல் இந்தியாவிற்குள்ளது. அதேபோன்று இந்தியாவின் மத்திய அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கும் தமிழ் நாட்டினைப் பகைத்துக் கொள்ள முடியாத உள்நாட்டு அரசியல் சூழலும் இந்தியாவிற்குள்ளது.

ஆனால் சீனாவும், ரஸ்சியாவும் இலங்கையில் நிகழ்ந்த “மனித உரிமை மீறல்” தொடர்பான விடயங்களை ஐக்கிய அமெரிக்கா தமது எதிர்கால பிராந்திய, பூகோள அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்துகிறது என்பதில் மிகவும் தெளிவான அறிவுடனுள்ளது. இதனால் இலங்கை விவகாரமானது ஓர் உள்நாட்டு விவகாரம். இதில் சர்வதேச நாடுகள் தலையீடு செய்ய தேவையில்லை என்ற கருத்தினை இவ்விரு நாடுகளும் மிகவும் பலமாக ஜேனிவாவில் முன்வைத்தன.

இந்நிலையில் இந்து சமுத்திரப் பிராந்தியம் முழுவதும் இராணுவக் கூட்டினைப் பலப்படுத்துவதனூடாக் ஆசியாவின் மையமாக இலங்கையினை மாற்றுவதற்கு தேவையான இராஜதந்திர முயற்சிகளை ஐக்கிய அமெரிக்கா செய்து வருகின்றது. இதன் மூலம் சீனாவின் செல்வாக்கினை இலங்கையிலிருந்து புறந்தள்ள முடியும் என ஐக்கிய அமெரிக்கா நம்புகின்றது.

2013ஆம் ஆண்டு தைமாதம் 28ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்கச் செயலாளர் ஜேம்ஸ் மூரே (James Moore) தலைமையில் தூதுக்குழு ஒன்று மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்தது. இத்தூதுக் குழு பாதுகாப்புச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோரைச் சந்தித்த பின்னர் மூரே “இலங்கையில் நல்லிணக்கத்தினையும், பொறுப்பினையும் 2012ஆண்டு தீர்மானத்திற்கு இணங்க துரிதப்படுத்துவதற்கான தீர்மானத்தினை ஐக்கியநாடுகள் சபை மனித உரிமை பேரவையில் மீண்டும் கொண்டுவர ஐக்கிய அமெரிக்கா உதவி செய்யும” எனத் தெரிவித்துள்ளார். இது இலங்கைக்கு ஐக்கிய அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையாகும்.

ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்ப்பது போன்று இலங்கையின் சீனச்சார்பு வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படாதவிடத்து வன்னியில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட யுத்தப் படுகொலைகளை ஐக்கிய அமெரிக்கா சர்வதேசளவில் தொடர்ந்து உரத்துக் கூவிக்கொண்டிருக்கும். இதன்மூலம் சர்வதேச அரங்கிலிருந்து இலங்கையினைத் தனிமைப்படுத்த ஐக்கிய அமெரிக்கா முயற்சிக்கலாம். அல்லது தனது நண்பர்களுடன் இணைந்து இலங்கைக்கு எதிரான கடுமையான வர்த்தக, பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கி அதனூடாக இலங்கையினைத் தண்டித்து தனது இஸ்டப்படி செயற்பட வைக்கலாம். எனவே ஐக்கிய அமெரிக்காவின் இலக்கு அடையப்படும் வரை இலங்கைத் தமிழ் மக்கள் விவகாரம் ஐக்கிய அமெரிக்காவிற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் துரும்புச் சீட்டாகவே இருக்கும். புத்திசாலித்தனமாக இலங்கைத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு திட்டம் உருவாகக்கூடிய இராஜதந்திரப் பொறிமுறையினை தமிழ் அரசியல் தலைவர்கள் இக்காலப்பகுதியில் உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். ஏனெனில் இது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைக்குப் பின்னர் கிடைத்திருக்கும் பிறிதொரு சந்தர்ப்பமாகும்.