1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.05.11, 2013.05.12 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

clip_image002 தென்சீனக் கடல்; பல்வேறு காரணங்களினால் மிகவும் முக்கியம் வாய்ந்த பிராந்தியமாகும். உலகிலுள்ள வர்த்தகக் கப்பல்களில் ஏறக்குறைய அரைப்பங்கு வர்த்தகக் கப்பல்கள் மலாக்கா நீரிணையூடாக சென்று தென்சீனக் கடலில் பிரயாணம் செய்கின்றன. இதனால் சுயஸ் கால்வாயில் ஏற்படுகின்ற கப்பல் போக்குவரத்து நெரிசல்களைவிட மூன்று மடங்கு அதிகமான கப்பல் போக்குவரத்து நெரிசல்களும் பனாமா கால்வாயில் ஏற்படுகின்ற கப்பல் போக்குவரத்து நெரிசல்களை விட ஐந்து மடங்கு கப்பல் போக்குவரத்து நெரிசல்களும் தென்சீனக் கடலுக்குச் செல்லும் மலாக்கா நீரிணையில் ஏற்படுகின்றது. தந்திரோபாய முக்கியத்துவம் மிக்க தென் சீனக்கடலில் ஸ்ப்ராட்லி (Spratly) தீவுக் கூட்டம் அமைந்துள்ளது. இத்தீவுக் கூட்டத்திற்குள் 100 ற்கும் 230 ற்கும் இடைப்பட்ட சிறிய சிறிய தீவுகள் உள்ளன. அத்துடன்,இத்தீவுகளைச் சுற்றி செழிப்பான மீன் வளம் உள்ளது. இத்தீவுகளில் எண்ணெய், இயற்கைவாயு மற்றும் கனியவளங்கள் அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுவதுடன், இதற்கான ஆராட்சிகளும் நடைபெறுகின்றன. குவைத்திலுள்ள எண்ணெய் படிமங்கள் பதின்மூன்று பில்லியன் தொன் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இத்தீவுகளில் ஏறக்குறைய பதினெட்டு (17.7) பில்லியன் தொன் எண்ணெய், இயற்கைவாயு படிமங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகில் எண்ணெய் வளமுள்ள பிரதேசங்களில் ஸ்ப்ராட்லி தீவுகள்; நான்காவது இடத்தினைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்சீனக் கடல் தகராறு

தென்சீனக் கடல் தகராறு ஏறக்குறைய நாற்பது வருட வரலாற்றினைக் கொண்டதாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தென்சீனக் கடற்பரப்பிலுள்ள ஸ்ப்ராட்லி தீவுகளின் இறைமைக்கு சீனா உரிமை கொண்டாடியது. ஸ்ப்ராட்லி தீவுகள் இரண்டாம் உலகப் போரின் போது யப்பான் ஆக்கிரமித்த சீனாவிற்குரிய தீவுகளாகும் என்பது சீனாவின் வாதமாகும். கைரோ மற்றும் பொஸ்டம் பிரகடனம் (Cairo Declaration and the Potsdam Declaration) இரண்டாம் உலகப் போரின் போது யப்பானினால் கைப்பற்றப்பட்ட சீனாவிற்குச் சொந்தமான அனைத்துப் பிரதேசங்களையும் திருப்பி வழங்க வேண்டும் எனக் கூறுகின்றது.

ஸ்ப்ராட்லி தீவுகளில் உள்ள இருபத்தொன்பது தீவுகளை வியட்நாமும், ஏழு தீவுகளை பிலிப்பைன்ஸ்சும், மூன்று தீவுகளை மலேசியாவும்,இரண்டு தீவுகளை இந்தோனேசியாவும், ஒன்பது தீவுகளை சீனாவும், ஒரு தீவினை தாய்வானும், ஒரு தீவினை புரூனேயும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. புரூனேயைத் தவிர ஏனைய நாடுகள் இராணுவத் தளத்தினை தமது கட்டுப்பாட்டிலுள்ள தீவுகளில் வைத்துள்ளன. புரூனே உத்தியோக பூர்வமாக உரிமைகோராத மீன்பிடி வலயத்தினை இங்கு உருவாக்கியுள்ளது.

1970 களில் வியட்நாம் ஸ்ப்ராட்லி தீவுகளின் சிலவற்றில் கட்டிட நிர்மாணங்களை மேற்கொண்டு இத்தீவுகளின் இறைமை தனக்கேயுரியது எனச் சட்ட பூர்வமாக உரிமை கோரியது. இது தென்சீனக் கடலில் தகராற்றினைத் தோற்றிவித்ததுடன், 1974 ஆம் மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் இரண்டு தடவைகள் சீனாவும், வியட்நாமும் யுத்தங்களிலும் ஈடுபட்டன. வியட்நாமினைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே, இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஸ்ப்ராட்லி தீவுகளில் தமக்குள்ள உரிமையினைப் பிரகடனப்படுத்தின.

1970 களில் டெங் சியாபிங் (Deng Xiaoping) வெளியிட்ட சீர்திருத்தக் கொள்கையின் பின்னர் சீனா தனது பொருளாதார அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தியதுடன், ஸ்ப்ராட்லி தீவுகள் விடயத்தில் 'பரஸ்பர அபிவிருத்தி,இறைமை என்பவற்றைக் கருத்தில் எடுத்தல்' என்னும் கொள்கையினைப் பின்பற்றியது. இதற்கிணங்க சீனாவும், ஆசியான் நாடுகளும் (தென்கிழக்கு ஆசியா நாடுகள் கூட்டமைப்பு - ASEAN) ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுக் கொண்டன. இதன்படி தென்சீனக்கடல் பிராந்தியத்திலுள்ள அனைத்துத் தரப்பும் பிராந்தியம்; தொடர்பாக எழுகின்ற அனைத்துத் தகராறுகளையும் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்ப்பது என உடன்பட்டுக் கொண்டன.ஆயினும் நம்பிக்கை தரக்கூடிய எவ்வித முன்னேற்றத்தையும் இவ் ஒப்பந்தம் நடைமுறையில் தரவில்லை.

2012 ஆம் ஆண்டு வைகாசி மாதம் தென்சீனக்கடல் பிரதேசத்தில் புதிய தகராறு உருவாகியுள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்தது. அதாவது சீனாவின் கடற்பரப்பிற்குள் ஸ்ப்ராட்லி தீவுகளைச் சுற்றி வியட்நாமிய ஆராட்சிக் கப்பல் அத்துமீறி நுழைந்துள்ளதாக சீனா குற்றம்சாட்டியதுடன், தனது மூன்று கடற்படைக் கப்பல்களால் வியட்நாமிய ஆராட்சிக் கப்பல் பயமுறுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டதாகவும் கூறியது.

இச்சம்பவத்தனைத் தொடர்ந்த ஆனி மாதம் ஐந்தாம் திகதி சீனத் தூதுவராலயத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய நூற்றுக் கணக்கான வியட்நாமிய மக்கள் 'சீனாவினால் வியட்நாமிய பிரதேசம் அத்துமீறப்படுகின்றது' என்று சீன அரசாங்கத்தினை குற்றம் சாட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து சீனாவிற்கு எதிரான மேலும் பதினொரு எதிர்ப்பு ஊர்வலங்கள் ஏறக்குறைய ஒருவாரத்தில் வியட்நாமில் நடாத்தப்பட்டன. ஆனிமாதம் ஒன்பதாம் திகதி சீனாவின் மீன்பிடி கப்பல்கள் சர்சைக்குரிய தென்சீனக் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வியட்நாமிய கடற்படையினரால் தூரத்தப்பட்டன.இது இரண்டு நாடுகளுக்குமிடையில் மீண்டும் பகைமை தீவிரமடைவதற்கு உடனடிக்காரணமாகியது.

கிழக்குச் சீனக் கடற்பரப்பிலும், தென்கிழக்குச் சீனக்கடற்பரப்பிலும் உள்ள கனியவளங்கள் மற்றும் எண்ணெய் வளம் என்பவற்றின் ஆராட்சி தொடர்பாக பிலிப்பைன்ஸ், வியட்நாம், தென்கொரியா, யப்பான் ஆகிய நாடுகளுடன் சீனா மோதலில் ஈடுபட்டுவருகின்றது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

தென்சீனக் கடற்பரப்பில் இந்தியச் செல்வாக்கு

தென்சீனக்கடலில் கடல்போக்குவரத்தினை மேற்கொள்வதில் இந்தியா மிகவும் ஆர்வமாவுள்ளது. கிழக்காசியாவிற்குக் கப்பல் போக்குவரத்தினைச் செய்வதற்;கான மிகமுக்கியமான நுழைவாயிலாகவும் இக்கடற்பிராந்தியம் உள்ளது. இந்துசமுத்திரம் மற்றும் பசுபிக் சமுத்திரம் ஆகிய இரண்டு பெரியசமுத்திரங்களும் சங்கமிக்கின்ற இடத்தில் தென்சீனக் கடல் அமைந்துள்ளது. எனவே தென்சீனக் கடலில் இந்தியா தனது புவிசார் பொருளியல், புவிசார் அரசியல் விஸ்தரிப்பிற்கும், உறுதித்தன்மைக்கும் ஏற்ற பாதுகாப்பினை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவையினை உணர்ந்துள்ளதுடன், அதற்கேற்ற செயற்பாடுகளையும் செய்து வருகின்றது.

தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் பொருளாதார தந்திரோபாய உறவுகளை இந்தியா பலப்படுத்த முயற்சிப்பதன் மூலம் கடல் வழிப் பாதையினைப் பாதுகாத்து தனது சந்தையினையும், போக்குவரத்தினையும் உத்தரவாதப்படுத்த முயற்சிக்கின்றது. தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளில் இந்தியாவிற்கு உள்ள பொருளாதார நலன் மிகவும் காத்திரமானதாகும்.

தென்சீனக் கடற்பரப்பில் இந்தியா மேற்கொள்ளும் தந்திரோபாய நலன்சார்ந்த செயற்பாடுகள் யாவும் வளர்ந்து வரும் இந்தியாவின் வர்த்தக, பொருளாதார ஆர்வத்தினால் தீர்மானிக்கப்பட்டதாகும். கிழக்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும்; இந்தியாவின் பொருளாதார நலன்கள் வேகமாக வளர்ந்து வருகின்றது.

கிழக்காசியாவிலும்,தென்கிழக்காசியாவிலும் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தக உறவினால் 2015ஆம் ஆண்டிற்கும் 2016 ஆம் ஆண்டிற்கும் இடையில் நூறு பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வகையில் தென்சீனக் கடலில் செல்வாக்குச் செலுத்த இந்தியாவிற்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பம் இந்திய - பசுபிக் சமுத்திரத்தில் இந்தியா பெற்றுள்ள தந்திரோபாய முக்கியத்துவத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியதாகும்.

ஆசிய பசுபிக் நாடுகளுடனான வர்த்தகத்தில் ஏறக்குறைய 55 % மான வர்த்தகத்தினை இந்தியா தென்சீனக் கடலினூடாகவே மேற்கொள்கின்றது. யப்பான்,கொரியா போன்ற நாடுகளுக்குப் பாதுகாப்பான சக்திவள விநியோகத்திற்கு இந்தியா செய்யும் பாதுகாப்பு உதவிகளுக்குப் புறம்பாக, வடபசுபிக் சமுத்திரத்திலுள்ள ரஸ்சியாவிற்குச் சொந்தமான சக்கலீன் தீவிலிருந்து ( Sakhalin ) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள கப்பல் துறைமுக நகரமாகிய மங்களோர் ( Mongalore ) வரை செல்லும் எண்ணெய்கப்பல்கள் இக்கடல்பிராந்தியத்தினூடாகவே செல்கின்றன.

இதனால் தென்சீனக்கடல்பிராந்தியம் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமாகின்றது. தென்சீனக்கடல் பிராந்தியம் மற்றும் பசுபிக் பிராந்தியம் என்பன இந்தியக்கடற்படையின் தந்திரோபாயச் செயற்பாட்டிற்கு தேவையான இரண்டாவது கடல் பிராந்தியமாக இந்தியக் கடற்படையினால் கருதப்படுகின்றது.எனவே தென்சீனக்கடலில் தொடர்ந்து சீனா ஆதிக்கம் செலுத்துமாயின் இக்கடல்பிராந்தியத்தில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்தியா சிரமங்களை எதிர்கொள்ளலாம்.

வியட்நாமுடனும் ஏனைய தென்கிழக்காசிய நாடுகளுடனும்; குறிப்பாக இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் இந்தியா வளர்த்து வரும் இருதரப்பு உறவு மற்றும் யப்பானுடன் இந்தியா வளர்த்து வரும் தந்திரோபாயக் கூட்டுறவு என்பன சீனாவின் கொல்லைப்புறத்தில் இந்தியா மேற்கொள்ள முயற்சிக்கும்; தந்திரோபாய தன்முனைப்பாகவே சீனாவினால் பார்க்கப்படுகின்றது.

மறுபக்கத்தில் இந்தியாவின் இத்தந்திரோபாய நிலையினால் எதிர்காலத்தில் இந்தியாவிற்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் தனக்கு ஏற்படக் கூடிய பின்னடைவுகளையும் சீனா நன்கு உணர்ந்துள்ளது எனவும் கூறலாம். இதனால் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும், தென்சீனக் கடற் பிராந்தியத்திலிருந்தும் விலகியிருக்குமாறு சீனா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது. ஏனெனில் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் தனது அதிகாரத்திற்கான முற்பாச்சல் இடமாக தென்சீனக் கடற் பிராந்தியத்தினை சீனா நோக்குகின்றது. இதற்குத்தடையாக இந்தியா இருப்பதை சீனா விரும்பவில்லை.இதற்காக இந்தியாவின் கொல்லைப்புறமாகக் கருதப்படும் மியன்மார், நேபாளம், இலங்கை, வங்காளதேசம், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் வர்த்தகம்,மூலப்பொருள் உட்பட ஏனைய விடயங்களிலும் இருதரப்பு உறவுகளைச் சீனா உருவாக்கி இந்தியாவினை அச்சுறுத்தி வருகின்றது. ஆனால் தென் சீன கடற்பரப்பில் இந்தியாவின் பிரசன்னத்தை யப்பான் வரவேற்று வருகின்றது

ஆயினும் இந்தியாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையில் உருவாகியுள்ள தந்திரோபாயப் பங்காளர் உறவின் பின்னணியில் இந்தியா பெற்றிருக்கும் கடல் சுதந்திரத்தினால் அச்சமடைந்துள்ள சீனா இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் இவ் அச்சத்தினைப் போக்க முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய வியட்நாமிய ஒப்பந்தம்

2011 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம்; வியட்நாம் ஜனாதிபதி றுங் ராங் சங் ( Truong Tan Sang ) இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்குடன் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஆராட்சிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுக்கொண்டார். அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான இராணுவ,வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒப்பந்தத்திலும் இருவரும் கைச்சாத்திட்டுக் கொண்டனர். தென்சீனக் கடற்பரப்பிலுள்ள தீவுகள் மீது சீனாவிற்கு இருக்கும் இறைமைக்கு இவ் ஒப்பந்தம் பெரும் சவாலானது எனச் சீனா கருதுகின்றது.

இதனால் திகைப்படைந்த சீனா தென்சீனக் கடல் பிராந்தியத்தில் சீனாவுடன் தொடர்புடைய சச்சரவுடன் இந்தியா தொடர்புபடுவதாக குற்றம் சாட்டியதுடன், இதிலிருந்தும், இப்பிராந்தியத்திலிருந்தும் இந்தியா விலகியிருக்க வேண்டும் என்று சீனா மீண்டும் வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கூட்டுத்தாபனம் தென்சீனக்கடலில் மேற்கொள்ளவுள்ள ஆராட்சியினைத் தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் சீனா பயன்படுத்த வேண்டும் என சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுப் பத்திரிகைகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமும், எண்ணெய்,மற்றும் இயற்கைவாயு உட்பட இயற்கை வளங்களும் உள்ள நாடாக வியட்நாம் உள்ளது. இந்தியா தனது பொருளாதாரத்தினை வளர்ப்பதற்கு அதிகளவு சக்திவளத்தினைத் தேடிக்கொண்டிருக்கின்றதொரு நாடு என்ற வகையில் வியட்நாம் மீது அதிகம் கவரப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

அண்மைக்காலமாக இந்திய கம்பனிகளின் முதலீட்டிற்கான சிறந்த இடமாக வியட்நாம் கருதப்படுகின்றமையினால் பல இந்தியக் கம்பனிகள் வியட்நாமில் முதலீடு செய்து வருகின்றன.இதேபோன்று வியட்நாமும் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது. இரு நாடுகளும் கடற் போக்குவரத்திற்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த உடன்பட்டுக் கொண்டன. இருநாடுகளும் பயங்கரவாதம், கடற்கொள்ளை, இயற்கை அனர்த்தங்கள் போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் மிகவும் நெருக்கமாக இருந்து செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரம் 2010 ஆம் ஆண்டு இருநாடுகளுக்குமிடையில் 2.7 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டு 15 பில்லியன் அமெரிக்க டொலரை இலக்காகக் கொண்டு இருநாடுகளும் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தென்சீனக் கடலில் உருவாகியிருக்கும்; வியட்நாம் சீனத் தகராற்றினால் வியட்நாமுடன் இணைந்து ஸ்ப்ராட்லி தீவுகளில் இந்தியா மேற்கொள்ளும் எண்ணெய் ஆராட்சி ஆபத்திற்குள்ளானால், தென் சீனக்கடல் பிராந்தியத்தில் இந்தியா தனது யுத்தக் கப்பல்களை நிறுத்தி இத்தகராற்றில் தலையிட இந்தியா தயாராக இருக்கின்றது என இந்திய கடற்படைத்தளபதி அட்மிரல் டி.கே.ஜோசி தெரிவித்துள்ளார். அதேநேரம் தென்சீனக்கடலில் இந்தியாவும் வியட்நாமும் கூட்டாக மேற்கொள்ளும் எண்ணெய் ஆராட்சியானது தென்சீனக்கடலில் வியட்நாமிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார நலன்கள் என்பதைவிட அரசியல் நலன்களால் அதிகம் தூண்டப்பட்டதாகும் எனச் சீனப்பத்திரிகையாகிய குளோபல் ரைம்ஸ் (Global Times) கருத்து வெளியிட்டுள்ளது.

எனவே வியட்நாமிய கடற்பரப்பிற்குள் இந்தியாவின் வருகையினை சீனா சந்தேகக் கண்கொண்டே பார்க்கின்றது. 2012 ஆம் ஆண்டு ஆடிமாதம் இந்தியாவின் யுத்தக் கப்பல் வியட்நாமிற்கு விஜயம் செய்துவிட்டு வியட்நாமிய கடற்கரையிலிருந்து நாற்பத்தைந்து கடல் மைல் தூரத்தினால் சென்ற போது சீனாவினால் மிகவும் நாகரீகமாகக் கண்டிக்கப்பட்டமையினைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியா , ஆசியான் கரையோரக் கூட்டுறவு

இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்குமிடையிலான கூட்டுறவு மிகவும் குறைவானதும், வரையறுக்கப்பட்டதுமாகும். இவ் வரையறுக்கப்பட்ட கூட்டுறவின் அடிப்படையில் இந்தியாவின் கடற்படைக் கப்பல்கள் தென்கிழக்கு ஆசியநாடுகளின் துறைமுகங்களுக்குத் தென்சீனக்கடலினூடாக அடிக்கடி சென்றுவந்தாலும், கடற்கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல் போன்ற அச்சுறுத்தல்களைப் போதியளவிற்குக் கட்டுப்படுத்த இந்தியாவினால் முடியவில்லை. தென்சீனக்கடலில் சீனா மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பினால் அதிகளவில் கவலை கொண்டுள்ள தென்கிழக்காசிய நாடுகள் சீனாவிற்கு சமாந்திரமாக இக்கடல் பிராந்தியத்தில் இந்தியா செயற்படுவதை மிகவும் நம்பிக்கையுடன் நோக்குவதுடன், இந்தியாவுடன் இணைந்து கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவும் விரும்புகின்றன.

இதனடிப்படையில் 2010 ஆம் ஆண்டு மாசிமாதம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்திய கடற்படை நடாத்திய கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஏறக்குறைய எல்லா ஆசியான் நாடுகளும் பங்கெடுத்திருந்தன. மேலும் மலேசியாவின் கரையோரப் பாதுகாப்பிற்கு இந்தியா உதவியுள்ளதுடன், ஏனைய ஆசியான் நாடுகளுக்கு உதவி செய்வதற்கும் தயாராகவுள்ளது. நம்பத்தகுந்ததும், தொழிநுட்பச் செயற்திறன் கொண்டதுமான வலிமையான கடற்படை இந்தியாவிடம் இருப்பது ஆசியான் நாடுகளுக்கு இந்தியா மீது பெரும் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவின் ஏவுகணைத் தொழிநுட்பம், ராடர் முறைமை, பொருத்தமான ஆயுதத் தளபாடங்களைக் கொண்ட பாதுகாப்பு முறைமை என்பவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள ஆசியான் நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பங்காளர்களாகப் பணியாற்ற விரும்புகின்றன.

யுத்தத்திற்கான தயார்நிலை

சீனா தனது கடற்படையில் விமானம் தாங்கிக் கப்பல் படைப்பிரிவு ஒன்றினை அண்மையில் உருவாக்கியுள்ளது. சீனாவின் வடக்குப் பிரதேசத்திலிருந்து சீனாவின் தெற்குப் பிரதேசம் வரையில் சீனாவின் கப்பல்கள் தரிக்கக் கூடிய துறைமுகங்கள் வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளன. சீனா இரண்டு விமானந்தாங்கிக் கப்பல்களை சங்காயிலுள்ள (Shanghai) கப்பல்கட்டும் துறைமுகத்தில் கட்டிவருகின்றது. 2010 ஆம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்களின் பலம் ஐக்கிய அமெரிக்காவின் பலத்தினை விட இருமடங்காகிவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு சீனாவின் மொத்த கடல்படை வலிமை ஐக்கிய அமெரிக்காவினை விட விஞ்சிவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சீனா தனது முதலாவது விமானம் தாங்கிக் கப்பலை வெற்றிகரமாகத் தயாரித்து 2012 ஆம் ஆண்டு ஆனி மாதம் எட்டுத் தடவை ஒத்திகை பார்க்கப்பட்ட பின்னர் மக்கள் விடுதலை இராணுவத்திடம் கையளித்துள்ளது. ரஸ்சியாவிற்குச் சொந்தமான வர்யாக் எனப் பெயரிடப்பட்ட ((Varyag) இக்கப்பல் உக்ரேயினால் கொள்வனவு செய்யப்பட்டு 2002 ஆம் ஆண்டு சீனாவிற்கு விற்கப்பட்டுள்ளது. சீனாவினால் லைஓனிங் ( Liaoning) எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கப்பலின் நீளம் 300மீற்றராகும் (990அடி). இக்கப்பல் உலங்கு வானூர்தி உட்பட ஐம்பது யுத்தவிமானங்களைக் காவிச் செல்லக்கூடியதாகும்.

சீனஅரச ஊடகம் கிழக்கு,தெற்குச் சீனக் கடலிலுள்ள தீவுகளை உரிமையாக்கும் முயற்சியிலீடுபட்டிருக்கும் யப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் நாடாத்தும் போட்டியினால் நிலவும் பதட்டத்தினைக் குறைப்பதற்கும், ஆராட்சி மற்றும் பயிற்சிகளுக்கும் இக்கப்பல் உதவும் எனவும், அயல்நாடுகளை அச்சுறுத்தும் நோக்கம் எதுவும் சீனாவிற்கு கிடையாது எனவும் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் பிராந்தியத்திய மற்றும் பூகோள அதிகாரத்திற்காக சீனா நடாத்தும் போராட்டம் சீனாவிற்கு ஏன் விமானம் தாங்;கிக் கப்பல் தேவை என்பதை உணர்த்தப் போதுமானதாகும்.

ஆனால் சீனாவின் கடற்படையில் விமானம் தாங்கிக் கப்பல் படைப்பிரிவின் வருகை தென்சீனக்கடல் பிராந்தியத்தில் பதட்டத்தினை உருவாக்கியுள்ளது. எனவே இதற்கு தயாராகும் விதத்தில் வியட்நாம் தனது இராணுவ செலவீனங்களை அதிகரித்ததுடன், ரஸ்சியாவிடமிருந்து விமானம் தாங்கிக் கப்பல் படைப்பிரிவினை எதிர்கொள்ளக்கூடிய ஏவுகணைகளையும் பெற்றுக்கொண்டது. அதேபோன்று பிலிப்பைன்ஸ் ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து புதிய அதிவேக கப்பல்களை கொள்வனவு செய்துள்ளது. வியட்நாம் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சிகளை தென்சீனக்கடற்பரப்பில் செய்துள்ளது. இது தென் சீனக் கடற் பரப்பில் நிகழும் தகராற்றுடன் ஐக்கிய அமெரிக்கா தொடர்புபட எடுக்கும் முயற்சியாகவும், சீனாவிற்கு ஐக்கிய அமெரிக்கா விடுக்கும் அச்சுறுத்தலாகவும் சீனாவினால் கருதப்பட்டது.

இந்நிலையில் ஏனைய வல்லரசுகளைப் போன்று தென்சீனக்கடலில் சீனாவின் சவால்களையும் மீறி செயற்படவேண்டிய தேவை தனக்குள்ளதாக இந்தியா நம்புகின்றது. அதேநேரம் வர்த்தகத்திற்கும் சர்வதேச பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமான தென்சீனக்கடல்பரப்பு பிற வல்லரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதை சீனா விரும்பவில்லை.எனவே தென்சீனக் கடற்பரப்பு தனக்கேயுரியது என்ற பிடிவாதமாகச் சீனா செயற்படுகின்றது. இதற்காக வூடித் (Woody) தீவில் இராணுவத் தளத்தினை உருவாக்கித் தென்சீனக் கடற் பிராந்தியம் முழுவதையும் சீனா உரிமை கோருகின்றது.

சீனப்பாதுகாப்பு அமைச்சர் 'யுத்தத்திற்கு சீனா தயாராகவுள்ளது. சீனாவின் கடல் மற்றும் விமானப் படைகள் தென்சீனக்கடலிலுள்ள எங்களது கடல் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்கத் தயாராக இருக்கின்றது' என வெளிப்படையாகத் கூறியிருக்கின்றார்.

ஆனால் சர்வதேசச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு சர்வதேச கடற்பரப்பில் எல்லா நாட்டுக் கப்பல்களும் பிரயாணம் செய்வது போன்று தென்சீனக் கடற்பரப்பிலும் எல்லா நாட்டுக்கப்பல்களும் பிரயாணம் செய்கின்ற சுதந்திரம் தேவையாகும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பாகும். தென்சீனக் கடற்பரப்பின் சுதந்திரத்திற்குத் தேவையான விலையினைக் கொடுக்க இந்தியா தயாரகவுள்ளது என்பதே சமகால அரசியல் யதார்த்தமாகும்.