1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

( தினக்குரல் , புதிய பண்பாடு இதழில் 2013.04.06, 2013.04.07 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

 

clip_image002 2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் 21ஆம் திகதி ஜேனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இருபத்திரெண்டாவது கூட்டத்தொடரில் இணை அனுசரணை நாடுகளாகிய அஸ்த்திரியா, கனடா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, கிறிஸ், இத்தாலி, நோர்வே, பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு எதிராக இரண்டாவது தடவையும் யுத்தக் குற்றச்சாட்டுப் பிரேரணையினைச் (A/HRC/22/L.l/REV.1) சமர்பித்து நிறைவேற்றிக் கொண்டது. இலங்கைக்கு எதிரான பிரேரணையில் சில திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா முயற்சித்தாலும், ஐக்கிய அமெரிக்காவின் ஏனைய நட்பு நாடுகளால் இந்தியாவின் இம்முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக இருபத்தைந்து நாடுகளும். எதிராக பதின்மூன்று நாடுகளும் வாக்களித்ததுடன், எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகியிருந்தன. ஐக்கிய அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இப்பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஆதரவாக அதிக வாக்குகள் கிடைக்கும் என பலராலும் எதிர்வு கூறப்பட்டதுடன். இது ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டுமிருந்தது.

சாராம்சம்

2013 ஆம் ஆண்டு பங்குனி மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுத் தீர்மானம் மிகவும் கடுமையான தொனியில், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகாலப்பகுதியில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பன பாரியளவில் மீறப்பட்டுள்ளதாகவும், இதற்கு சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பொறுப்புக்கூறுவதுடன், யுத்தக்களத்தில் நடந்த மனிதப்படுகொலைகளுக்கு நம்பத்தகுந்ததும், நடுநிலையானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இத்தீர்மானம் வலியுறுத்திக் கூறியுள்ளது.

மேலும், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை மற்றும் சிபார்சுகளையும் இத்தீர்மானம் அங்கீகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு நிகழவிருக்கும் கூட்டத்தொடரின் போது இது தொடர்பான முன்னேற்றத்தினை இலங்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கருத்து

இலங்கையில் வாழும் எல்லா மக்களதும் நற்பேறு, உறுதியான சமாதானம் என்பவற்றை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சர்வதேச சமுதாயம் அர்ப்பணிப்புடன் பணியாற்ற தயாராகவுள்ளது என்று செய்தி தெளிவாக இவ்வாக்களிப்பின் மூலம் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது ஐக்கிய அமெரிக்காவின் கருத்தாக இருந்தது. இதனை வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புச்சபை ( National Security Council) பேச்சாளர் கைற்லின் ஹைடன் ( Caitlin Hayden) தெளிவுபடுத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது இலங்கையில் மீண்டும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறுதல் ஆகிய இரண்டையும் மேம்படுத்தும் என்றும், இரண்டு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையில் குணப்படுத்த முடியாமலிருந்த இனமோதலைக் குணப்படுத்த உதவும் என்றும், இலங்கையில் மீறப்பட்ட சர்வதேசச் சட்டம், சர்வதேச மனிதாபிமானச்சட்டம் என்பவற்றிற்கு நம்பத்தகுந்த விசாரணைகள் நடந்துவதை இத்தீர்மானம் ஆர்வப்படுத்தும் என்றும் ஐக்கிய அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையின் நியாயங்கள்

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கைப் பிரதிநிதி ஐக்கிய அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணை இலங்கையினால் ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும். இலங்கை மேற்கொள்ளும் நல்லிணக்கச் செயற்பாட்டினை இது இல்லாதொழித்து விடும் எனக் குற்றம் சுமத்தியிருந்தார்.

நவநீதம்பிள்ளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கை தொடர்பாக கூறப்பட்டுள்ள விடயங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயங்களைக் கொண்டவைகளல்ல என்பது இலங்கையின் கருத்தாகவும் இருந்தது. அதேநேரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இதுவரை நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் வெற்றி கொள்வதற்கு இலங்கை கையாண்ட தந்திரோபாயச் செயற்பாடுகளும் தோல்வியடைந்திருந்தன.

2012ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சீனாவும், ரஸ்யாவும் வழங்கிய ஆதரவிற்கும் மத்தியில் இலங்கை பாரிய தோல்வியைத் தழுவியிருந்தது. இப்பாடத்தில் இருந்து இலங்கை விடயங்களைக் கற்றுக் கொண்டு இவ்வருடம் இதிலிருந்து மீளுவதற்கு முயற்சித்திருக்க வேண்டும். இவ்வாறு முயற்சிக்காது விட்டமை இராஜதந்திர ரீதியில் இலங்கை தோல்வியடைவதற்குக் காரணமாகிவிட்டது.

இந்தியாவின் நிலை

2013 ஆம்; ஆண்டு மாசி மாதம் 26ஆம் திகதி இந்தியாவின் ராஜ்ஜ சபையில் இலங்கையின் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாகவும், அதற்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள பிரேரனை தொடர்பாகவும் இந்தியா பின்பற்றவுள்ள கொள்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இவ் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியாவின் வெளி விவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் ( Salman Khurshid) 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிசக் கட்சி ஆகியன இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாலும், இலங்கை இறைமையுடைய நாடு என்ற வகையில் அதன் உள்விவகாரத்தில் நேரடியாக இந்தியா ஓரு போதும் தலையீடு செய்ய மாட்டாது. இலங்கையின் இன மோதலுடன் தொடர்புபட்டு இந்தியா நிறையவே துன்பப்பட்டு விட்டது. எதிர்காலத்தில் இவ்வாறு துன்பப்படவும் தனது நட்பு நாடு ஒன்றினைத் தண்டிக்கவும் இந்தியா விரும்பவில்லை' எனத் தெரிவித்திருந்தார்.

சல்மன் குர்ஷிட் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையினால் மனஆறுதலுடனும், தைரியத்துடனும் இலங்கை இருந்தது. ஆயினும்; இந்தியப்; பிரதமர் மன்மோகன் சிங் 2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் 6ஆம் திகதி பாராளுமன்றத்தின் கீழ்சபையில் நிகழ்த்திய உரையில் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக இலங்கையிடமிருந்து இந்தியா எதிர்பார்க்கும் செயற்பாடுகளை பின்வருமாறு கோடிட்டுக் காட்டியிருந்தார்

  • இலங்கையில் இறுதி யுத்த காலப்பகுதியில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்பவற்றில்; மிகவும் உறுதியான செயற்பாட்டினை இந்தியா எதிர்பார்க்கிறது
  • பதின்மூன்றாவது அரசியல் யாப்புத் திருத்தத்தினை அமுல்;படுத்துவதுடன் அர்த்தமுள்ள அரசியல் தீர்வினை முன்னெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் முயற்சிக்க வேண்டும்.
  • வட மாகாணசபைக்கான தேர்தலை நடாத்துதல் வேண்டும்
  • கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையையும், செயற்திட்டத்தினையும் உருவாக்க வேண்டும்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் உரை இலங்கைக்கு பெரும் திகைப்பினை கொடுத்திருந்தது.இலங்கையில் நல்லிணக்கத்தையும், அரசியல் தீர்வினையும் அடைவதற்குத் தேவையான முன்நகர்வினை எந்தளவில் இலங்கை மேற்கொள்கின்றது என்பதனையும், இதிலிருந்து இலங்கை விலகுமாக இருந்தால் இலங்கையினை மனித உரிமைகள் பேரவையில் கையாளுவதற்கான புறச்சூழலை உருவாக்குவது தொடர்பாகவும் இந்தியா சிந்திக்கத் தொடங்கி விட்டது என்பதையும் மன்மோகன் சிங்கின் உரை தெளிவுபடுத்தியிருந்தது.

இச்சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மத்தியரசில் கூட்டுச் சேர்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழகத்தில் அதிகாரத்திலிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், இந்திய கம்யூனிசக் கட்சி என்பவற்றுடன் ஏனைய தமிழகக் கட்சிகளும் இந்தியாவின் தேசியக் கட்சிகளாகிய குறிப்பாக பாரதிய ஜனதாக்கட்சி மற்றும் காங்கிரஸ்கட்சி ஆகியவற்றின் அங்கத்தவர்களும் சனல் 4 காணொளி இறுதியாக வெளியிட்டிருந்த பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பான ஆவணங்களினால் பாதிப்படைந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர்.

இதனால் பெரும் நெருக்கடி நிலை ஒன்றை மத்திய அரசாங்கம் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளதாகக் காட்டத் தொடங்கியதுடன், மத்திய அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கை இலக்குகளுக்கு அப்பால் சென்று மத்திய அரசாங்கம் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் காட்டிக்கொண்டது. இதன்மூலம் இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியா எடுக்கப்போகும் கொள்கைக்கு நியாயம் தேடிக் கொண்டது. எனவே யுத்தக் குற்றங்களுக்காக சர்வதேச சமுதாயத்திற்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதனூடாகத் தேசியளவில் தனக்கு ஏற்பட்டிருந்த அரசியல் அழுத்தத்தினை வெற்றி கொண்டதாகக் காட்டிக் கொண்டது.

எனவே 2013 ஆம் ஆண்டு மாசி மாதம் 26ஆம் திகதி இந்தியாவின் வெளி விவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் வெளியிட்ட கருத்திற்கு எதிரான செயற்பாட்டினை இந்தியா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொண்டது எனக் கூறலாம். இந்திய பிரதிநிதி டிலிப் சின்ஹா ( Dilip Sinha) இத்தீர்மானம் தொடர்பான விவாதம் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற போது 'பொறுப்புக்கூறுதலையும் இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் இலங்கை உத்தரவாதப்படுத்த வேண்டும். இவைகள் யாவும் சர்வதேச சமுதாயத்தினால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். வெகுசன தொடர்பு சாதனங்களுக்கு சின்ஹா வழங்கிய செவ்வியில் தமிழ் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வினை வலியுறுத்திக் கூறியிருந்தார்.

யதார்த்தம்

உண்மையில் இந்தியாவின் ஆதரவுடனேயே உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையினால் வெற்றிகொள்ள முடிந்தது. 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இலங்கையில் உள்நாட்டு யுத்தமும் இறுதிநிலையினை அடைந்திருந்தது. இச்சந்தர்ப்பத்தில் காங்கிரஸ்கட்சி தலைமையிலான கூட்டு அரசாங்கம் தமிழகத்தின் அழுத்தத்தின் மத்தியில் தேர்தலில் வெற்றி பெறுவதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதிலும் தீவிரமாக இருந்தது. ஏககாலத்தில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக யூகோஸ்லேவியா கொண்டுவந்த பிரேரணைக்கு எதிராக அங்கத்துவ நாடுகளிடையே இந்தியா பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன், அதற்கு எதிராக வாக்களித்து இப்பிரேரணையினைத் தோல்வியடையச் செய்தது. இதன்பின்னர் இந்தியாவின் ஆதரவில்லாமல் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இரண்டு யுத்தக் குற்றப் பிரேரணைகளையும் இலங்கையினால் தோற்கடிக்க முடியவில்லை. அனேக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் தென்னாசியப் பிராந்திய வல்லரசாகிய இந்தியாவினை அச்சாகக் கொண்டு அசைகின்றன என்ற சர்வதேச அரசியல் யதார்த்தத்தினை இலங்கை ஏற்றுக்கொள்ள மறுத்துவருகின்றது. இந்தியாவினை தந்திரோபாய ரீதியல் வெற்றி கொள்வனூடாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்கப் பிராந்திய நாடுகளை தம்வசப்படுத்தலாம் என்ற ஐக்கிய அமெரிக்காவின் கணிப்பு இங்கு வெற்றியளித்துள்ளது.

எனவே 2012 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தமையினால் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்த இலங்கை இந்தியாவிற்கு இது தொடர்பாக எதிர்காலத்தில் இருக்க கூடிய இடர்பாடுகளை மீள்பகுப்பாய்வு செய்திருக்க வேண்டும். மறுபக்கத்தில் 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள இந்திய அரசாங்கம் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களால் தேசிய மட்டத்தில் தனக்கு ஏற்படக் கூடிய அசௌகரியங்களைக் கருத்தில் எடுத்தே செயற்படும் என்ற உண்மையினை இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யாது விட்டமை எல்லா இராஜதந்திரத் தோல்விகளுக்கும் காரணமாகிவிட்டது.