1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

( தினக்குரல் இதழில் 2013.05.01 திகதி பிரசுரிக்கப்பட்டது )

clip_image002 நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூக அமைப்புகளில் வாழ்ந்த மக்கள் நிலப்பிரபுக்களினதும், முதலாளிகளினதும் பணப்பைகளை நிரப்புவதற்காக நாள் முழுவதும் இடைவெளியின்றி உழைக்க வேண்டியிருந்தது. முதலாளித்துவ சமூக வளர்ச்சியின் குறிப்பிட்டதொரு கட்டத்தில் முதலாளி வர்க்கத்தினால் பெருமளவு மக்கள் அடிமைகளாகவும் வைக்கப்பட்டிருந்தனர். முதலாலித்துவ சமூக அமைப்பில் தொழிலாளர் வர்க்கம் ஓய்வு இன்றியும், நாள் ஒன்றிற்கு எத்தனை மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்ற நியதியின்றியும், இதர சலுகைகள் இன்றியும் முதலாளிகளுக்காக உழைத்து வந்தனர். முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. 'குறைந்த செலவில் கூடிய இலாபம் பெறுதல்' என்ற முதலாளித்துவ வர்க்க குணாம்சம் தொழிலாளர் வர்க்கத்தினை பதின்நான்கு மணித்தியாலங்கள் தொடக்கம் இருபது மணித்தியாலங்கள் வரையில் உழைப்பில் ஈடுபடுத்தியது. அடக்குமுறை பலாத்காரம் சுரண்டல் என்பவற்றிற்கு உள்ளாகியிருந்த தொழிலாளர் வர்க்கத்தின் அக உள்ளுணர்வு படிப்படியாகத் தட்டியெழுப்பப்பட்டது. இதன்மூலம் பசி, வறுமை என்பவற்றிற்கு எதிராகவும், இழந்து போயிருக்கும் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும், சுயகௌரவத்தினைப் பெற்றுக் கொள்வதற்காகவும்; தொழிலாளர்; வர்க்கம் தொடர்ந்து போராடத் தொடங்கியது. இவ்வகையில் சர்வதேசம் முழுவதும் முதலாளித்தவ முறைமைக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் போராடியதை நினைவு கூரும் வகையில் சர்வதேசளவில் மே மாதம் 1ஆம் திகதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.

அமெரிக்காவில் பத்துமணி நேர வேலைக்கான போராட்டம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் முதலாளித்துவ வர்க்கம் பாரியளவில் பொருளாதாரத்தினைக் குவிக்கத் தொடங்கியது. ஐக்கிய அமெரிக்காவில் இரும்பு, சுரங்கத்துறை, இரசாயன கைத்தொழில் துறைகள் வளர்சியடையத் தொடங்கின. இதன்மூலம் ஐக்கிய அமெரிக்கா பாரியளவிலான கைத்தொழில் அபிவிருத்தியையடைந்தது. அத்துடன் கண்டங்களுக்கிடையிலான புகையிரதப் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டன.

ஐக்கிய அமெரிக்க தொழிலாளர் வர்க்கம் 'தொழில் நேரத்தினைக் குறைத்தல்' என்ற கோசத்தினை முன்வைத்து 1820ஆம் ஆண்டு போராட்டத்தினை ஆரம்பித்தனர். இவ்வாறான போராட்டங்களுக்கான சம்மேளனங்களை உருவாக்கி இச்சம்மேளனங்களின் கீழ் அணிதிரளத் தொடங்கினர். தொழிலாளர்; சம்மேளனங்களின் தோற்றமும் வளர்ச்சியுமானது 1827 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பல பாகங்களிலும் தொழிலாளர்கள் பத்து மணிநேர வேலை கோரி வேலை நிறுத்தம் செய்யக் காரணமாகியது. இவ்வேலை நிறுத்தங்களினால்; உடனடி பலாபலன்கள் கிடைக்காவிட்டாலும் பத்து வருடங்களின் பின் அதாவது 1837ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களின் வேலை நேரம் பத்து மணித்தியாலங்களாகக் குறைக்கப்பட்டது.

இக்காலத்தில் வேலைநாட்களைக் குறைப்பதற்காகத் தொழிலாளர் வர்க்க அமைப்புக்கள் குறிப்பிடத்தக்க போராட்டங்களை நடாத்தத் தொடங்கின. 1837 ஆம் ஆண்டு பொஸ்ரன்  தொழிலாளர்கள் நாள் ஒன்றிற்கு பத்து மணித்தியாலங்களை வேலைநேரமாக்கக் கோரி போராடப்போவதாக அறிவித்தனர். அதேவருடம் பிலடெல்பியாவில் (Philadelphia)) தொழிலாளர்கள் மூன்று வாரங்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுத் தனியார், பொதுத் துறைகளில் நாள் ஒன்றிற்கு பத்து மணித்தியால வேலை நேரத்தினைப் பெற்றுக் கொண்டனர். ஆயினும் 1837 ஆம் ஆண்டிலிருந்து 1841 ஆம் ஆண்டு வரையில் பத்து மணித்தியால வேலை நேரத்தினைப் பூரணமாகத் பெற்றுக் கொள்ளத் தொழிலாளர் வர்க்கம்; போராடவேண்டியிருந்தது.

பத்து மணித்தியால வேலைநேரத்தினை எட்டு மணித்தியால வேலை நேரமாகக் குறைக்க வேண்டும் என்ற கருத்து தோற்றம் பெறத் தொடங்கியது. இதற்கான தொழிற்சங்க வடிவிலான தொழிலாளர் உரிமைப் போராட்டங்கள் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. 1868 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஆறு மாநில அரசுகளும்,பல நகரங்களும் எட்டு மணித்தியால வேலைநாள் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. அதேவருடம் சமஸ்டியிலுள்ள எல்லாத் தொழிலாளர்களுக்கும்; எட்டு மணித்தியால வேலைநாள் என்ற சட்டமூலம் காங்கிரஸ்சில் நிறைவேற்றப்பட வேண்டும் எனப் பிரச்சார செய்து பத்தாயிரம் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது. ஆனால் 1873 ஆம் ஆண்டு தொடக்கம் 1879 வரையில் இவ்விலக்கினை அடைவதில் எவ்வித முன்னேற்றத்தினையும் அடையமுடியவில்லை. 1886 ஆம் ஆண்டு மே மாதம் ஐக்கிய அமெரிக்காவில் சிக்காகோ நகரில் ஹய்மார்கெற் (Haymarket) சதுக்கத்தில் நடந்த தொழிலாளர்கள் படுகொலையினால் உள்ளீர்க்கப்பட்டு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இது உடனடியாக பாரிய வெற்றியைத் தராவிட்டாலும் நீண்ட காலத்தில் தொழிலாளர் வர்க்கம் உலகளாவிய ரீதியில் வெற்றி பெறுவதற்கு அடித்தளமிட்டிருந்தது.

அவுஸ்ரேலியத் தொழிலாளர்கள்

நாள் ஒன்றிற்கு எட்டு மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற சிந்தனையும், தொழிலாளர் வர்க்கத்திற்கு என விடுமுறை தினம் உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டும் என்ற சிந்தனையும் அவுஸ்ரேலியா தொழிலாளர் வர்க்கத்தினரிடம்; உதயமாகியது.

1856ஆம் ஆண்டு அவுஸ்ரேலியத் தொழிலாளர்கள் வருடத்தில் ஒரு நாள்; முழுமையான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனத் தீர்மானித்தார்கள். மேலும்; இத்தினத்தில் எட்டு மணிநேர வேலை கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடாத்துவது, பொதுக் கூட்டங்களை நடாத்துவது மற்றும் கேளிக்கை நிகழ்வுகளில் பங்கேற்பது எனவும்; தீர்மானித்தார்கள். அத்துடன் 1856ஆம் ஆண்டு சித்திரை மாதம் இருபத்தியோராம்; திகதியை தொழிலாளர் விடுமுறை தினமாக்குவது எனவும் தீர்மானித்தார்கள். 1856ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்ட தொழிலாளர் விடுமுறை தினமே எதிர்காலத்தில் இவ்வாறான விடுமுறை தினத்தி;னை வருடா வருடம் ஏற்பாடு செய்து கொண்டாட வேண்டும் என்ற மன உணர்வினை அவுஸ்ரேலியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஏற்படுத்தியது.

தொழிற்சாலைகளில் அடிமைகளாக உழைக்கும். தொழிலாளர் வர்க்கம் தங்கள் சக்தியை ஒன்றுதிரட்டுவதன் மூலம் பெற்றுக் கொள்ளும் மனத்துணிவினை வேறு எவ்வழியிலும்;; பெற்றுக் கொள்ள முடியாது. இவ்வகையில் அமெரிக்காவில் பத்துமணி நேர வேலையினைக் கோரி மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் போராட்டமானது, 1856ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவில் எட்டுமணி நேர வேலையினை கோரிப் போராட வைத்ததுடன், வெகுவிரைவில் தொழிலாளர் வர்க்க விடுமுறை தினம் எனும் கொள்கை அவுஸ்ரேலியத் தொழிலாளர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவுஸ்ரேலியாவிலிருந்து ஏனைய நாடுகளுக்கும் இக் கொள்கை பரவிச் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் முழுவதையும் இறுகப்பற்றிக் கொண்டது.ஏற்கனவே அமெரிக்காவில் பத்து மணிநேர வேலை கோரிப் போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு அவுஸ்ரேலியத் தொழிலாளர்களின் தொழிலாளர் வர்க்க விடுமுறை தினம் என்ற கொள்கை மிகவும் கவர்ச்சியான தொன்றாக இருந்தது.

அவுஸ்ரேலியத் தொழிலாளர்களைப் பின்பற்றி அமெரிக்கத் தொழிலாளர்கள் 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் திகதியை பொது வேலை நிறுத்த தினமான பிரகடனப்படுத்தினர். இத்தினத்;தில் இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு எட்டு மணித்தியால வேலை நேரம் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசாங்க அடக்கு முறைகளினால் மீண்டும் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறுவது சில வருடங்கள் தடைப்பட்டிருந்தாலும் அமெரிக்க தொழிலாளர்கள் 1888 ஆம் ஆண்டில் தங்கள் தீர்மானத்தினைப் புதுப்பித்து 1890ஆம் ஆண்டு மே மாதம் முதல் திகதியை தொழிலாளர்களுக்கான விடுமுறை தினமாக பிரகடனம் செய்தனர்.

தொழிலாளர் தின பிரகடனம்

அமெரிக்க அவுஸ்ரேலியக் கண்டங்களில் வளர்ச்சியடைந்து வந்த தொழிலாளர் இயக்கங்கள் ஐரோப்பா கண்டங்களுக்கும் பரவி அங்கும் தொழிலாளர் இயக்கம் பெரிதும் வளர்ச்சியடைந்ததுடன் புத்தூக்கமும் பெற்றது. ஐரோப்பியத் தொழிலாளர்களின் எழிச்சியின் உச்சக்கட்டத்தை 1889 ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் எடுத்துக் காட்டியது. இம்மகாநாட்டில் கலந்து கொண்ட 400 பேராளர்கள் எட்டு மணிநேர வேலைக்கான போராட்டத்தினை முதன்மைப்படுத்துவது எனத் தீர்மானித்தனர். அத்துடன் இம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 'சகல நாடுகளிலும் தொழிலாளர் தினம்' என்ற தீர்மானமும் இடம்பெற்றிருந்தது. இத்தீர்மானத்திற்கான பிரேரணையினை பிரான்சில் போட்கோஸ் (Bordcaux) பிரதேசத்தில் லாவிஞ்ஞ (Lavigne) என்பவர் சமர்ப்பித்திருந்தார்.

அதேநேரம்; இம்மகாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்கத் தொழிலாளர்கள் தாம் 1888 ஆம் ஆண்டில் மே மாதம் முதல் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடுவது எனப் பிரகடனம் செய்திருப்பதைச் சுட்டிக் காட்டியதையடுத்து, சர்வதேச தொழிலாளர் சம்மேளனமும் அத்தினத்தையே சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடுவது எனத் தீர்மானித்தது. இதேபோன்று மே மாதத்தினை சர்வதேச தொழிலாளர் நாளாகக் கொண்டாடுவது என 1889 ஆம் ஆண்டு ஆடி மாதம் இரண்டாவது சர்வதேசம் என அழைக்கப்பட்ட பாரீஸ்சில் கூடிய மாக்ஸ்சிச சர்வதேச சோசலிச காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எல்லாத் தொழிலாளர்களுக்கும் எட்டு மணித்தியால வேலை நேரம் என்பதை வென்றெடுப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவது எனவும் இம்மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி சர்வதேசத் தொழிலாளர் தினம்; வருடாந்தம்; மே மாதம் 1ஆம் திகதி கொண்டாடப்பட வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். எனவே அடக்குமுறைக்குட்பட்டிருந்த தொழிலாளர் வர்க்கம் சர்வதேசளவில் ஐக்கியப்பட்டு தனக்கான அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொண்டது எனலாம்.

ஐரோப்பாவில் ஏறக்குறைய ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் உள்ள தொழிலாளர்கள் எட்டு மணித்தியால வேலை நேரம் கோரி ஊர்வலங்களை நடாத்தினர். இதேபோன்று பெரு,சிலி, போன்ற தென் அமெரிக்க நாடுகளிலுள்ள தொழிலாளர்களும், கியூபாவிலுள்ள தொழிலாளர்களும் எட்டு மணித்தியால வேலை நேரமும், வெள்ளை இனத் தொழிலாளர்களுக்கும், கறுப்பினத் தொழிலாளர்களுக்கும் இடையே சம உரிமை கோரிப் போராடியதுடன், தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்தினையும் கோரி நின்றனர்.

சர்வதேச நாடுகளின் அங்கீகாரம்

ரஸ்சியப் புரட்சியைத் தொடர்ந்து, 1920 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி சீனத் தொழிலாளர்கள் தமது முதலாவது தொழிலாளர் தினத்தினைக் கொண்டாடினார்கள்.1927 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி இந்தியத் தொழிலாளர்கள் மும்பாய்,சென்னை,கல்கத்தா ஆகிய நகரங்களில் ஊர்வலங்களை நடாத்தியதுடன் தொழிலாளர் தினத்தினையும் கொண்டாடினர். 1938 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் எட்டு மணித்தியால வேலை நேர சட்டமூலத்தினை இயற்றியது. உண்மையில் இந்நாளே மே மாதத்தினை சர்வதேசத் தொழிலாளர் வர்க்க நாளாக சர்வதேசமாக்கியது எனக் கூறலாம்.

சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையினை வெளிப்படுத்தும் நாளாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 1ஆம் திகதி உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.அதாவது அடக்குமுறை, பலாத்காரம், சுரண்டல் ஆகியவற்றிற்குட்பட்டு வாழ்ந்த தொழிலாளர் வர்க்கத்தின் விடிவிற்கு வித்திட்ட தினமாக மே தினமானது உலகமெங்குமுள்ள உழைக்கும் வர்க்கத்தவர்களால் 1890ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இன்று வரை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.ஐரோப்பா,வட அமெரிக்கா,தென் அமெரிக்கா,ஆசியா,ஆபிரிக்கா,அவுஸ்ரேலியா கண்டங்களில் வாழும் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு வீதிகளில் அணிவகுத்து நின்று தமது பலத்தினையும்,உரிமைக்கான கோரிக்கைகளையும் சர்வதேசளவில் எடுத்துக்காட்டி வருகின்றனர். இவ் அணிவகுப்புக்களை சில நாடுகளில் தொழிற்சங்கங்களும்,சில நாடுகளில் புரட்சிகரக் கட்சிகளும்; அல்லது அரசாங்கங்களும்; ஒழுங்குபடுத்துகின்றன.இவைகள் யாவும்; தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றினை சர்வதேசளவில் நினைவுகூர்ந்து இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றது.

இத் தினத்தில் தொழிலாளர் வர்க்கம் சர்வதேசளவில் ஐக்கியப்படவும், ஆளும் வர்க்கம் மேற்கொள்ளும் போலியான நாட்டுப்பற்று, ஏகாதிபத்திய யுத்தம், இனவாதம் போன்றவற்றிற்கு எதிராக எழுச்சி கொள்கின்றது. குறுகிய சிந்தனைகள், சித்தாத்தங்களுக்குட்படாது தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபடுமாயின் எஞ்சியிருக்கும் எல்லா உரிமைகளையும் மானிடவர்க்கம் வென்றெடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை எனக் கூறலாம்;.

ஐக்கியம், ஒற்றுமை, பலம் என்பன வரலாற்றில் பல தடங்களைப் பதித்து சென்றுள்ளது. தொழிலாளர் வர்க்கம் அடைந்து கொண்ட இவ் வெற்றியானது பிற்பட்ட காலங்களில் ஏற்பட்ட சகல ஒடுக்கு முறைகளுக்கான போராட்டங்களுக்கும் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. சர்வதேச சட்டபூர்வ அங்கீகாரத்தினைப் பெற்றுள்ள தொழிலாளர் தினமானது எதிர்காலத்தில் நிகழக்கூடிய நீதிக்கான அனைத்துப் போராட்டங்களுக்கும் தலைமை தாங்கும் போராட்டமாக முனைப்படையும் என நம்பலாம்.