1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.08.18 , 2012.08.19 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002 இந்தியாவின் சுதந்திரத்திற்காக இந்தியத் தேசியக் காங்கிரஸ் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. ஆயினும் இந்தியத் தேசியக் காங்கிரஸ் நடாத்திய பெரும் கிளர்சிகளில் 1940 ஆம் ஆண்டிற்கும் 1942 ஆம் ஆண்டிற்கும் இடையில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு உட்பட ஏறக்குறைய 60,000 காங்கிரஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.இறுதியில் பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சிக்குட்பட்டிருந்த இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 15 ஆம் திகதி தனது சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது.இது ஆசியாக் கண்டத்தில் புதியதோர் தேசம் ஒன்றின் பிறப்பாகவும் இந்தியாவின் புதியதோர் ஆரம்பமாகவும் கணிக்கப்பட்டது.

சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அதன் பாதுகாப்பு முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் பிரித்தானியர் தமது ஆட்சிக் காலத்தில் பின்பற்றிய பாதுகாப்புக் கொள்கையையே சுதந்திர இந்தியாவும் பின்பற்ற முனைந்தது.பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கை பற்றி பணிக்கர் விளக்குகையில் பிரிட்டிஸ் ஆதிக்கமானது இந்தியாவைப் பாதுகாப்பதற்கென சமுத்திரத் திட்டம்,கண்டத் திட்டம், என இரு திட்டங்களை கொண்டிருந்தது.அவை இந்தியாவின் வட மேற்குப் பகுதிகளை பாதுகாத்தல்,இந்திய துணைக் கண்டத்தைச் சூழவுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் ஏனைய வல்லரசுகளின் கைகளில் விழாது தடுத்தல்,இந்து சமுத்திரம் மீதும் அத்தனிச் சூழவுள்ள பகுதிகள் மீதும் ஆதிக்கம் செலுத்துதல் ஆகிய மூன்று அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. எனக் குறிப்பிட்டார்.

இந்திய எதிர்ப்புணர்வுள்ள நாடுகள் இலங்கையுடன் உறவுகளைப் பேணுவதை இந்தியா எப்போதும் தனக்கான அச்சுறுத்தலாகவே கருதி வந்தது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையும்,இந்தியாவும் அதன் ஆட்சிக்குட்பட்ட நாடாக இருந்ததனால் அவர்களுக்கு அது அச்சுறுத்தலாக இருக்கவில்லை. ஆனால் சுதந்திரமானது இவ்விரு நாடுகளையும் இறைமை,சுயாதிபத்தியம்,தன்னாதிக்கமுடைய இரு நாடுகளாக உருவாக்கியிருந்தது.சுத்தந்திரத்திற்கு முன்னர் இலங்கையானது இந்தியாவுடன் இணைக்கப்படுதல் வேண்டும் எனவும்,இரண்டு நாடுகளும் பொதுவான பாதுகாப்புக் கொள்கையினைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் இந்தியத் தலைவர்கள் கருதி வந்துள்ளனர்.எடுத்துக்காட்டாக 1945 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு ”இந்திய சமஸ்டி அரசியல் அமைப்பில் இலங்கையும் ஒரு சுயாதிக்கமுள்ள பகுதியாக நிலவலாம்” எனக் கூறியிருந்தார். இதேபோன்று ”பட்டாபி சீதாராமையாவும் இந்தியாவிற்கு விரோதமான நாடுகளுடன் இலங்கை உறவு கொள்ளக் கூடாது என்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்புக் கொள்கையே இருக்கவேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

விசையியக்க மாற்றம்

1980 களில் இலங்கையில் இந்தியாவின் நலன் என்பது புவிசார் தந்திரோபாய அதிகாரச் சமனிலையினைப் பேணுதல் என்பதிலிருந்து விடுபட்டு இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக இருந்தது. 1980 களின் பின்னர் இந்தியாவின் தென்பகுதியிலிருக்கும் இலங்கையில் ஐக்கிய அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்திருந்தமை இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகக் கொள்ளப்பட்டது. ஆயினும் 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் தனக்கிருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலை இந்தியா வெற்றிகரமாகத் தவிர்த்துக்கொண்டது. ஒப்பந்தத்தின் மூன்றாம் பகுதி இந்தியாவின் பிரதம மந்திரிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் பரிமாறப்பட்ட கடிதங்களை உள்ளடக்கியிருந்தது.இக்கடிதங்கள் பின்வரும் விடயங்கள் தொடர்பாக எழுதப்பட்டிருந்தன.

  1. இந்தியாவின் பாதுகாப்பு – இலங்கையில் வெளிநாட்டு இராணுவங்களின் செயற்பாட்டினால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஏற்படும் பாதிப்பு.
  2. திருகோணமலைத் துறைமுகமும்,ஏனைய துறைமுகங்களின் பயன்பாடும்
  3. இலங்கையில் செயற்படும் வெளிநாட்டு ஒலிபரப்பு சேவையில் இராணுவ புலனாய்வு விடயங்களிற்கு இடமளிக்கக் கூடாது.
  4. திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை இந்தியாவும், இலங்கையும் கூட்டாகச் செயற்படுத்துவது.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தமது நாட்டிற்கு அருகிலிருந்து ஐக்கிய அமெரிக்கா மேற்கொண்டு வந்த வானொலி உளவுச் சேவையினைத் தடுத்திருந்தனர்.அனேக புவிசார் அரசியல் தந்திரோபாயப் பகுபாய்வாளர்களின் கருத்துப்படி இலங்கையில் உறுதிப்பாடில்லாததோர் நிலையினைத் தோற்றிவித்ததன் மூலம் இந்தியா பயன்மிக்கதோர் சுயபதுகாப்பினைத் தேடிக்கொண்டதாகக் கூறுகின்றார்கள்.

பூகோள மீள் ஒழுங்கமைப்பு

சுதந்திர இந்தியா பனிப்போர் முடிவடையும் வரை அணிசேராக் கொள்கையின் முக்கிய பங்காளராகவும் ,செயற்பாட்டாளராகவும் இருந்தது.மேலும் குறைவிருத்தி நாடுகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் முதனிலைப் பாதுகாவலராகவும் இருந்தது. பனிப்போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா தனியொரு உலக வல்லரசாக எழுச்சியடைந்தது.இது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையிலும் மாற்றத்தினை ஏற்படுத்தியது.ஐக்கிய அமெரிக்காவுடன் இறுக்கமான உறவினைப் பேணுவதற்கு இந்தியா அதிக கவனம் செலுத்தியதுடன்,தனது தேசிய நலன் சார்ந்து பல்திசை உறவுகளை புவிசார் அரசியல் பங்காளிகளுடன் பேணுவதிலும் அதிக கவனம் செலுத்தியது. குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவுடன் மாத்திரமன்றி ரஷ்சியா,சீனா மற்றும் பிரதான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனும் இறுக்கமான உறவினைப் பேணுவதில் கவனம் செலுத்துகின்றது. இந்தியாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு பூகோள அளவில் இந்தியா தனது நலனைப் பாதுகாப்பதற்கு முக்கியமானதாகும்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் சர்வதேச சவால்களையும்,அதிகரித்துச் செல்லும் பூகோள அதிகாரத்தினை எதிர்கொள்ளும் வகையில் கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் தந்திரோபாய நிலைப்பாடும் ,பூகோள பொருளாதார ,வர்த்தகமும் மாற்றமடைந்துள்ளது.இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்பு எல்லை விரிவடைந்து இப்போது அதற்குள் பொருளாதாரப் பாதுகாப்பு, சுதந்திர வர்த்தகம், சக்திவலுப் பாதுகாப்பு, பொதுமக்களுடைய சமூகப் பாதுகாப்பு, பிரதேச ஒருமைப்பாடு போன்றனவும் முக்கியம் பெறுகின்றது .

இதேபோன்று இந்தியா ஆசியான் நாடுகளுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை வளர்க்க முயலுகின்றது. இதனொரு பகுதியாக தாய்லாந்துடன் இந்தியா கைச்சாத்திட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை நோக்கமுடியும் . அதேபோன்று மியன்மாருடனும் நல்லுறவினைப் பேணுவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது. மியன்மாரூடாக இந்தியா மேற்கொள்ளும் உள்கட்டுமான அபிவிருத்தியானது ஆசியான் நாடுகளுடன் தரைத்தொடர்பினை அபிவிருத்தி செய்ய உதவும். .

தெற்காசியாவிலுள்ள இந்தியாவின் அயல்நாடுகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இது பூகோள வல்லரசாக எழுகின்ற சீனாவினுடைய விருப்பத்தின் ஒருபகுதியாக இருக்குமாயின் தெற்காசியாவில் சீனாவின் வல்லாதிக்கத்திற்கு எதிரான தடைகளை ஏற்படுத்த இந்தியா விரும்பலாம்.ஆயினும் சீனாவுடன் நேருக்கு நேர் மோதுகின்ற நிலையினை இந்தியா விரும்பாது நட்புறவினை விருத்தி செய்யவே விரும்புகின்றது.அதாவது இருநாடுகளும் வெற்றி பெறும் (Win-Win Relation) உறவினைப் பேணவே இந்தியா விரும்புகின்றது.அதேநேரம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் நலன்களையும் இந்தியா பாதுகாத்துக் கொள்ளவிரும்புகின்றது.

இந்தியாவினுடைய பூகோள வர்த்தகத்திற்கு இந்துசமுத்திரத்தின் கடல்வழிப்பதை பிரதானமானதாகும். இந்தியாவினுடைய அதிகரித்துச் செல்லும் சக்திவலுவினை இக்கடல் வழிப் பாதையூடாகவே இந்தியாவிற்குள் கொண்டு வரவேண்டியுள்ளது. இதற்காக இந்தியா ஆழ்கடல் கடற்படையினை உருவாக்கி தனது பொருளாதார நலனைப் பாதுகாக்கின்றது. உலகப் பொருளாதாரத்தில் சீனா இன்று இரண்டாவது இடத்தினையும், இந்தியா படிப்படியாக மூன்றாவது இடத்திற்கும் நகர்ந்து வருகின்றது. இரண்டு நாடுகளும் பொருளாதார ரீதியில் அடைந்து வரும் வலுவான நிலையானது பலமான இராணுவக் கட்டமைப்பினை உருவாக்குவதற்குரிய வல்லமையினைப் பெற உதவும். இவ்வகையில் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலைப் பொறுத்தவரை இவ்விரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று பின்வரும் வகையில் பிணைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் எழுச்சிக்கு எதிராக இயற்கையாக உருவாகும் சமநிலையாளராக இந்தியாவினை அவதானிக்க முடியும்.இந்தியாவின் கடல்வலுவும்,ஐக்கிய அமெரிக்கா,ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் கூட்டு செயற்பாடுகளும் சீனாவின் கடல் சார்ந்த நலன்கள் மீது தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.சீனாவின் அச்சுறுத்தலை கட்டுப்பாடிற்குள் வைத்திருப்பதற்கு இந்தியா ஐக்கிய அமெரிக்காவுடன் கைகோர்த்து நிற்பதுடன்,பலமுனை அதிகார பூகோள அரசியலை இந்தியா ஆதரித்து நிற்க வேண்டிய கட்டாயச் சூழல் உள்ளது.எனவே துரித வளர்ச்சியடையும் சீன,இந்தியப் பொருளாதாரம் இந்து சமுத்திர, பசுபிக் சமுத்திரப் பிராந்திய கரையோர நாடுகளில் புவிசார் அரசியலை மீள் ஒழுங்கமைப்பு செய்வதற்குரிய இயலாற்றல் மிக்க உந்து விசையினைக் கடுமைப்படுத்தலாம்.

சீனாவும், இந்தியாவும் தமது வர்த்தகத்திற்குக் கடல்வழித் தொடர்பிலேயே அதிகம் சார்ந்துள்ளன.ஏறக்குறைய 90 சதவீத உலக வர்த்தகச் செயற்பாடுகள் கடல் மார்க்கமாகவே நடைபெறுகின்றன. 2008 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் தலாவீத வருமானம் 3000 அமெரிக்க டொலர்களாக அதிகரித்து. 2020 ஆம் ஆண்டுகளில் 8500 அமெரிக்க டொலர்களையும், 2030 ஆம் ஆண்டுகளில் 20,000 அமெரிக்க டொலர்களாகவும் சீனாவின் தலாவீத வருமானம் அதிகரிக்கும் ஏன் எதிர்வு கூறப்படுகின்றது. 2010 ஆம் ஆண்டு 1000 அமெரிக்க டொலர்ளாக இருந்த தலாவீத வருமானம் 2039 ஆம் ஆண்டு 10,000 அமெரிக்க டொலர்களாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக நாடுகள் திகைப்படையும் வகையில் இரு நாடுகளினதும் தலா வருமானம் வளர்ச்சியடைந்து வருகின்றது.உலகப் பொருளாதாரத்துடன் சீனாவும், இந்தியாவும் இணைதல் என்பது கடல்வழித் தொடர்பாடலில் இரு நாடுகளும் பெரும் செல்வாக்கினை பெறுவதற்கு வாய்ப்பாகவுள்ளது.இரு நாட்டு மக்களினதும் பொருளாதார வாழ்க்கைக்கான எல்லைக் கோடாக சமுத்திரங்கள் மாறுவதால்,பாரிய முதலீடுகளை செய்து வரும் இந்தியாவும்,சீனாவும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சிறப்பான இராணுவ, தந்திரோபாய முகாமைத்துவத்தினைப் பேணுவதன் மூலமே தமது முதலீடுகளைப் பாதுகாக்க முடியும்.

சீனாவும் ,இந்தியாவும் தமது தேசிய நலன்களுக்காக நெகிழ்வுடையதும் பலமுடையதுமான இராணுவத் தந்திரோபாயங்களை உருவாக்குவதற்கான தேவையினை உணர்ந்துள்ளன.இந்தியா,சீனா ஆகிய நாடுகள் பல்திறன் கொண்ட இராணுவ உபகரணங்கள்,கடற்படையின் வலிமை என்பவற்றை தந்திரோபாய ரீதியில் உயர்த்த வேண்டும் என கணிப்பிடப்பட்டுள்ளன.இதற்காக இரு நாடுகளும் கடற்படையினை வலுப்படுத்தத் தமது வளப்பங்கீட்டு வீதத்தினை அதிகரித்துள்ளன.இரு நாடுகளும் ஆழ்கடல் கடற்படையினை (Blue Water Navies) கட்டமைப்பதில் முன்னேறி வருகின்றன. பூகோள பொருளாதாரத்துடன் தவிர்க்க முடியாதபடி இணைக்கப்பட்டு பலமடையும் இரு நாடுகளும் ஆழ்கடல் கடற்படையின் உதவியுடன் தமது உள்ளூர்,பிராந்திய எல்லை கடந்து தமது பொருளாதார நலன்களுக்காக இராணுவ வல்லாதிக்கத்தினை விஸ்தரிக்க முயற்சிக்கின்றன.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும்,சீனாவிற்கும் இடையிலான இரு தரப்பு உறவினை தீர்மானிக்கும் சக்தியாக இந்தியா எழுச்சியடைந்து வருகின்றது.கடந்த பத்தாண்டு கால புவிசார் அரசியலின் முக்கிய விடயமாகவும் இதுவே உள்ளது. 2005 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 11 ஆம் திகதி சமாதானம்,முன்னேற்றம் என்பவைகளுக்கான தந்திரோபாயப் பங்காளராக சீனாவினை இந்தியா ஏற்றுக்கொண்டது.இது புது டெல்லியினால் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான செயற்பாடு எனவும் கூறப்பட்டது. இத்தந்திரோபாயப் பங்காளர்கள் என்ற உறவு சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் 1962 ஆம் ஆண்டு தொடக்கம் ஏற்பட்டு வரும் எல்லைத் தகராறுகள், பரஸ்பர வர்த்தகப் பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு உதவலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்காவுடன் தனக்கு ஏற்பட்டுள்ள நட்புறவானது அருகிலுள்ள அயல்நாடுகள் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய சூழ்நிலையினை உருவாக்க உதவும் என்ற நம்பிக்கை இந்தியாவிற்குள்ளது.ஆசியாவின் இரண்டு பயனாளிகளுக்கும் இடையிலான மிகவும் செழிப்பான கூட்டுறவு, பிராந்திய அதிகாரத்தினை இரண்டு நாடுகளும் சமமாகப் பகிர்ந்து கொள்வதிலேயே தங்கியுள்ளது. இதன் மூலம் உலக ஒழுங்கினை மீள் ஒழுங்குபடுத்தி புதிய அதிகாரச் சமநிலையினை உருவாக்க முடியும் என்ற அவா இரு நாடுகளிடமும் காணப்படுகின்றது. இதனால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடம் மீண்டும் உணரப்பட்டுள்ளதுடன்,இலங்கையினத் தமது செல்வாக்கிற்குட்படுத்த அல்லது கடுப்படுத்த மூன்று நாடுகளும் பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றன.

முடிவுரை

இந்தியா ஏனைய இரு நாடுகளுடனும் பரஸ்பர உறவினை பேணுவதற்கான வழிவகைகளை சரியாக இனம் காணுதல் வேண்டும்.ஐக்கிய அமெரிக்காவுடன் இந்தியா பேணுகின்ற நல்லுறவானது ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தினை நீண்டகாலத்திற்கு தடுப்பதற்கு உதவலாம்.நீண்டகாலகாகத் தீர்க்கப்படாது தொடரும் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லைத் தகராறு,இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தொடரும் கடல் போட்டி, இருநாடுகளுக்கும் இடையிலான ஆயதப் போட்டி என்பன முடிவில்லாது தொடர வாய்ப்புள்ளது. ஆயினும் ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் தந்திரோபாய மற்றும் பாதுகாப்பு உறவினை வைத்திருக்கின்றன.அதாவது இந்தியா தெற்காசியாவில் ஐக்கிய அமிரிக்காவிற்கு இருக்கும் தந்திரோபாயப் பங்காளி மாத்திரமன்றி பிரதான பொருளாதார மையமுமாகும். இதனால் சமாதான சமநிலையினை இப்பிராந்தியத்தில் பேணவும், சீனாவினால் மேற்கொள்ளப்படக்கூடிய எவ்வித ஆக்கிரமிப்புச் செயல்களையும் தடுக்க இந்தியாவிற்கு ஐக்கிய அமெரிக்கா உதவும். எல்லோருடைய நோக்கமும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தம் நலனைப் பேணுவதேயாகும். இதற்காக இலங்கையினை அரவணைத்து தம்வசப்படுத்த அல்லது அச்சுறுத்தி தமது கடுப்பாட்டிற்குள் வைத்திருக்க ஐக்கிய அமெரிக்கா,சீனா,இந்தியா ஆகிய நாடுகள் போட்டி போடுகின்றன. இப்போட்டியின் விளைவாக இலங்கையில் உள்நாட்டு யுத்தம் அல்லது பயங்கரவாத அழிப்பு என்ற பெயரில் சிறுபான்மை இனமொன்று சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் படுகொலை செயப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா, இந்தியா,ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் புதியதோர் பனிப்போர் ஆரம்பமாக வாய்ப்புள்ளது. இப்பனிப்போர் ஆரம்பமாகுமாயின் யார் வெற்றியடையப் போகின்றார்கள் என்பதை இலங்கை தான் தீர்மானிக்கும். ஏனெனில் இலங்கையினை யார் தம் வசப்படுத்துகின்றார்களோ அவர்களால் இந்து சமுத்திரப் பிராந்தியம் முழுவதையும் கடுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும்.