1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.10.13 , 2012.10.14 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002 இலங்கையுடன் சீனா 55 வருடகாலமாக இறுக்கமான இராஐதந்திர உறவுகளைப் பேணி வருகின்றது. சீனா தொடர்ந்தும் இலங்கையுடன் எல்லாவகையான கூட்டுறவினையும், நட்புறவினையும், பரஸ்பர ஆதரவினையும் மேலும் ஆழமாக வளர்க்க விரும்புகின்றது. சமகால இலங்கை சீன உறவானது மாறும் சர்வதேசச் சூழலை எதிர்கொண்டு தமக்கிடையில் இறுக்கமான நல்லுறவினை வளர்த்துச் செல்கின்றது. மேலும் இந்துசமுத்திரத்திலுள்ள தெற்காசிய நாடுகளின் கரையோரங்களூடாகவும் சீனா தனக்குத் தேவையான மூலப்பொருட்களையும், எரிபொருட்களையும் சர்வதேசச் சந்தையிலிருந்து எடுத்துச் செல்கின்றது. இதனால் சீனா தெற்காசிய நாடுகளுடன் பரஸ்பர நன்மை, இருதரப்பும் வெற்றி பெறும் நிலை, சமாதான சகவாழ்வு என்பவற்றைப் பேண விரும்புகின்றது.

ஜெனரல் லியங் குவாங்லியின் விஜயம்

2012ஆம் ஆண்டு ஆவணிமாதம் 29ஆம் திகதி ஐந்து நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியங் குவாங்லி (Liang Guanglie) இலங்கை வந்திருந்தார். சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் விஜயம் இதுவாகும். இதன்போது அவருடன் இணைந்து 23 உயர் அதிகாரிகள் வருகை தந்திருந்தார்கள். இலங்கை மீது சீனாவிற்குள்ள உச்சமட்ட நலன்களை எடுத்துக்காட்டும் நிகழ்வாகவே இதனைச் சர்வதேச இராஜதந்திரிகள் கருதியிருந்தனர். இலங்கை வந்திருந்த சீனப்பாதுகாப்பு அமைச்சர் குழு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமாகிய மகிந்த ராஜபக்ஷா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர்களைச் சந்தித்ததுடன், இலங்கையின் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய முக்கியமான பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.

இருநாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்புத் தொடர்பாக இலங்கை வெளியிட்ட அறிக்கையில் “இரு நாடுகளுக்கிடையில் நட்புறவினையும், சமாதானத்தினையும் பேணுவதற்கான சம்பிரதாயபூர்வமான சந்திப்பு” எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளருக்கும், சீனாவின் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் “இலங்கையும், சீனாவும் இருநாட்டு இராணுவ உறவுகளை இறுக்கமாகப் பலப்படுத்துவதற்கு இது பரஸ்பரம் உதவும்” எனக் கூறப்பட்டது.

ஆயினும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “இது இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல் நம்பிக்கை, பல்வேறு துறைகள் சார்ந்த ஒத்துழைப்பு, பரிமாற்றம், ஸ்தரிப்பு என்பவைகளுடன் கூடிய ஆழமான நட்புறவாகும். பிராந்திய சமாதானம், உறுதித்தன்மை, அபிவிருத்தி என்பவைகள் தொடர்பாக எழும் பிரச்சினைகளைக் கையாளுவதில் இருநாடுகளும் திறமையுடனும், பொறுப்புடனும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். மரபு சாராத பாதுகாப்பு விடயங்களில் கூட்டுறவுடனும், இறுக்கமான பரிமாற்றத்துடனும் செயற்பட வேண்டும். இரு நாடுகளும் நெருக்கமான நட்பினைப் பேணுவதற்கு மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும்”. எனக் கூறப்பட்டிருந்தது. இலங்கை ஆட்சியாளர்கள் எப்போது, யாருடன் கூட்டுச் சேர வேண்டும் என்பதை சரியாகவே புரிந்து வைத்துள்ளார்கள். வரலாற்று ரீதியில் சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்கள் இதுவரை இராஜதந்திரத் தோல்வியை சந்திக்கவில்லை.

சீனா குறிப்பிட்ட மரபுசார் பாதுகாப்பு மற்றும் தகராறுகளை இணைந்து தீர்த்தல் என்பதனூடாகச் சர்வதேசப் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டுச் செயற்பாடுகளை இலங்கையுடன் இணைந்து சீனா முன்னெடுத்தது. இதன் ஒருபகுதியே தழிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் சீனாவினால் வழங்கப்பட்ட இராணுவ உதவியும், ஏனைய பிற உதவிகளுமாகும்.

2007ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கைக்கான இராணுவ உதவிகளை இடை நிறுத்தி வைத்திருந்த பொழுது, சீனா குறிப்பிடத்தக்களவு இராணுவ தளபாட விற்பனையினை இலங்கைக்கு செய்துள்ளது. 2008ஆம் ஆண்டு, 37.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவத் தளபாட விநியோகத்திற்கான ஒப்பந்தத்தினை சீனா இலங்கையுடன் செய்திருந்தது. இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை வெல்லுவதற்கு உதவியாக இருந்துள்ளது.

2007ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு இராணுவத் தளபாடங்களை விற்பனை செய்யுமாறும், சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட யுத்த விமானங்களை செலுத்துவதற்கான பயிற்சிகளை இலங்கையின் விமானிகளுக்கு வழங்குமாறும் பாக்கிஸ்தானையும் ஆர்வப்படுத்தி வந்துள்ளது. இதே நடைமுறையினைத் தெற்காசியாவின் ஏனைய நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து சீனா முன்னெடுக்க விரும்புகின்றது என்ற செய்தியை தெற்காசியாவினைச் சூழ நிகழ்ந்து கொண்டிருக்கும் பல சம்பவங்கள் தெரிவிக்கின்றன.

தெற்காசியாவில் சீனாவின் கவனம்

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான இராணுவ, பொருளாதாரக் கூட்டுறவிற்குப் புதிய பரிமாணத்தினை வழங்க சீனா முயற்சிக்கின்றது. தெற்காசிய நாடுகளில் பிரதானமாக பாக்கிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஆழமான நட்புறவினைச் சீனா பேணி வருகின்றது. தெற்காசியாவில் குறிப்பாக இலங்கையில் 12 அபிவிருத்தித் திட்டங்களுக்கும், பாக்கிஸ்தானில் 20 அபிவிருத்தித் திட்டங்களுக்கும், வங்காளதேசத்தில் 09 அபிவிருத்தித் திட்டங்களுக்கும், நேபாளத்தில் 36 அபிவிருத்தித் திட்டங்களுக்கும், ஆப்கானிஸ்தானில் 07 அபிவிருத்தித் திட்டங்களுக்கும், மாலைதீவில் 08 அபிவிருத்தித் திட்டங்களுக்கும் சீனா நிதி உதவி செய்து வருகின்றது.

சீனாவின் தேசிய பலமும், சர்வதேசச் செல்வாக்கும் குறிப்பிடக் கூடியளவிற்கு வளர்ந்திருந்தாலும், சர்வதேச நாடுகளில் சீனா இலங்கையின் பெருந்தெருக்கள் விஸ்தரிப்பு அபிவிருத்திக்குச் செய்யும் முதலீடு தொடர்பாகப் பலமான சந்தேகம் நிலவுகின்றது. சர்வதேச நாடுகள் இதனை சீனாவின் பயமுறுத்தல் கோட்பாடு (China Threat Theory) என பிரச்சாரம் செய்கின்றன. எதிர்காலத்தில் ஆசிய பசுபிக் சமுத்திரத்தில் சீனா யுத்தம் ஒன்றை நடாத்த வேண்டிய தேவையேற்பட்டால் இலங்கை இவ்யுத்தத்தில் பிரதான தளங்களில் ஒன்றாகச் சீனாவிற்குப் பயன்படும் என்பதும், விரைவாகப் படைகளை முன்நகர்த்துவதற்கு இலங்கையில் அபிவிருத்தி செய்யப்படும் பெருந்தெருக்கள் உதவும் எனவும் கருதப்படுகின்றது.

ஏறக்குறைய 50 வருடங்களுக்குப் பின்னர் சீனாவின் உள்நாட்டு உயர் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராகிய சூ யங்கங் (Zhou Yongkang) ஆப்கானிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பரஸ்பரப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒப்பத்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான படைகள் 2014 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிய பின்னர் அயல்நாடுகள் ஆப்கானிஸ்தானின் மீது தமது செல்வாக்கினை விஸ்தரிக்கக் காத்திருக்கின்ற இத்தருணத்தில், 2012ஆம் ஆண்டு ஆனி மாதம் பீஜிங்கில் நடந்த பிராந்திய மகாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் தமது நாடுகளுக்கிடையில் தந்திரோபாயக் கூட்டுப்பங்காளர் உறவினை இறுக்கமாகப் பேணுவது எனத் தீர்மானித்துள்ளனர்.

சீனாவுடன் ஆப்கானிஸ்தான் செய்துள்ள இப்புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 300 ஆப்கானிஸ்தான் காவல்துறையினருக்கு பயிற்சி வழங்கவும், ஆப்கானிஸ்தானிலுள்ள வளமுள்ள பிரதேசங்களில் சீனா முதலீடு செய்யவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எனவே தெற்காசியாவில் தனது முதலீடுகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய தேவையும் சீனாவிற்குள்ளது. இதற்காக நட்புறவுரீதியான பரிமாற்றங்கள், கூட்டுறவு என்பவைகளைத் தெற்காசிய நாடுகளுடன் சீனாவின் இராணுவம் பேணிவருவதுடன், பிராந்தியப் பாதுகாப்பு, உறுதித்தன்மை என்பவகைகளைப் பேணவும் விரும்புகின்றது.

இராணுவ ஒத்திகை

சீனாவின் பிரதான கடல்வழிப் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் தமிழீழ விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருந்ததுடன் சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் கடற்படையினையும் (கடற்புலிகள்) கட்டமைத்திருந்தது. மலாக்கா நீரிணைப் பிரதேசத்தில் நிகழ்ந்து வரும் ஆயுதக்கடத்தல், கடற்கொள்ளை, ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பு இருப்பதாகச் சீனா நம்பியிருந்தது. இந்துசமுத்திரக் கடல்வழித் தொடர்பாடலுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புபட்டிருப்பது சட்டவிரோதமானதும், சீனாவிற்கு அச்சுறுத்தலான செயலாகவும் நோக்கப்பட்டதுடன், இலங்கையின் கிழக்குக் கடலில் தனது சுதந்திரமான செயற்பாட்டையும் சீனா விரும்பியது. எனவே இந்து சமுத்திரப் போக்குவரத்துப் பாதையில் தமிழீழ விடுதலைப்புலிகளால் தனக்கு இருக்கும் அச்சுறுத்தல்களையும், தடைகளையும் அகற்றுவற்கு சீனா இலங்கையுடன் இராணுவ ரீதியில் கைகோர்க்க விரும்பியது.

இதனை 2007ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் இரு தரப்பும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை தெளிவுபடுத்தியது. இவ்வறிக்கை “பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீங்கு விளைவிக்கக்கூடிய படைகளை எதிர்த்து போராடுவதற்கு கூட்டாகச் செயற்படுவதுடன், பயங்கரவாதச் செயற்பாட்டிற்கு எதிராகச் சர்வதேச, பிராந்திய மட்டங்களில் இணைப்பினையும், ஆலோசனைகளையும் உருவாக்குதல் வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு இணங்கவே 2007ஆம் ஆண்டு சித்திரை மாதத்திலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்குச் இலங்கைக்கு இராணுவ ஆலோசனைகளையும், ஆயுத உதவிகளையும் சீனா வழங்கியது எனக் கொள்ளமுடியும்.

யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் இந்துசமுத்திரக் கடல்வழித் தொடர்பாடல் பிரதேசத்தில் குறிப்பாக இலங்கையின் கிழக்குக் கடல் பிரதேசத்தில் தனது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அண்மையில் சீனா உலகிற்கும், குறிப்பாக இந்தியாவிற்கும் வெளிப்படுத்தியுள்ளது. இதனை இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் வாகரைக் கடல் பிரதேசத்தில் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையும் சீனாவின் இராணுவம் நடாத்திய கூட்டு இராணுவ ஒத்திகை (Joint Services Exercise “Cormorant III”) மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த இராணுவ ஒத்திகையில் இலங்கை, பாக்கிஸ்தான், வங்காளதேசம், மாலைதீவுகள் ஆகிய நாடுகளின் படைகள் கலந்துகொண்டிருந்தன. இவ் இராணுவ ஒத்திகையில் இந்தியா பங்கெடுக்க மறுத்திருந்ததாயினும் சீனாப்பாதுகாப்பு அமைச்சர் லியங் குவாங்லி இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தயோக பூர்வ விஜயத்தின் பின்னர் இவ் ஒத்திகையில் பார்வையாளராகக் கலந்து கொள்ள இந்தியா உடன்பட்டது.

ஒரு வகையில் இது மிகவும் சுவரஸ்சியமான நிகழ்வாகும். ஏனெனில் தெற்காசிய நாடுகளின் இராணுவக் கூட்டு ஒத்திகையொன்றின் மூலம் தெற்காசியாவில் திடீரென நுழையும் எதிரியை சீனா எப்படி முறியடிக்கப் போகின்றது என்பதை இந்தியா பார்வையிட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் தெற்காசிய நாடுகளுக்கு இராணுவ, பொருளாதாரத் தலைமைத்துவத்தினைச் சீனா வழங்கத் தயாராகிவிட்டது என்ற செய்தி சர்வதேசளவில் பகிரப்பட்டுள்ளது.

திரிசங்குநிலை

இதுவரைகாலமும் இலங்கையின் பாதுகாவலனாகவும் தெற்காசியாவின் வல்லரசாகவும் தானே இருப்பதாகக் கற்பனை செய்து வந்த இந்தியாவின் பார்வைக்குப் புதியகாட்சியொன்று காட்டப்பட்டுள்ளது. அக்காட்சி யாதெனில் இலங்கைக்கு எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய எல்லா ஆபத்துக்களையும் அல்லது பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளையும் சீனா நேரடியாகக் கையாளத்தயாராக இருக்கின்றது என்பதுடன் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்பினையும், அபிவிருத்தியையும் சீனா தனது கையிலெடுத்துள்ளது என்பதாகும். அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கும் இந்தியாவிற்கும், உலகிற்கும் மூன்றாவது நாடு ஒன்றினை இலக்கு வைத்து எவ்வித நடவடிக்கைகளையும் இப்பிராந்தியத்தில் தான் மேற்கொள்ளவில்லை எனச் சீனா கூறியது சற்று ஆறுதலையும், சமாதானத்தினையும் ஏற்படுத்தியிருந்தாலும், பலமடையும் சீனாவின் அதிகார வலுவினைச் சிதைக்கின்ற வல்லமை இப்போது யாரிடமும் இல்லை என்பதும், தெற்காசியப் பிராந்திய அதிகாரச் சமனிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதுமே உண்மையாகும். இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் அதிகாரச் சமனிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பாகச் செயற்படுவது போல், இலங்கையின் அரசியலில் பங்கெடுத்திருக்கும் எல்லோரும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய வல்லாதிக்கத்திற்காக எமது அடுத்த தலைமுறை மீண்டும் இரத்தம் சிந்த அனுமதிக்க முடியாது. எல்லோரும் தம்மை தாமே நம்புவதும், அதிகாரச் சமனிலை மாற்றத்தினை உன்னிப்பாக அவதானிப்பதும் அவசியமாகும். தமிழீழ விடுதலைப்புலிகளைப் போல் யாரும் மீண்டும் மக்களை திரிசங்கு நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது.