சுதந்திரம் - 3.8 out of 5 based on 4 votes
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.75 (4 Votes)

சுதந்திரம் என்ற பதம் என்ற லிபர் (Liber )என்றஇலத்தீன் சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். லிபர் (Liber )என்ற இலத்தீன் சொல்லிற்குரிய பொருள் சுதந்திரம் ( Free ) என்பதாகும். சுதந்திரம் என்ற பதம் குறிப்பாக அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இப்பதம் தனக்கேயுரிய பொருளை தெளிவுபடுத்துவதில்லை. எனவே முன்னோடி அரசியல் விஞ்ஞானிகள் குறைந்த பட்சம் மனித செயற்பாட்டின் சுயசெயற்பாட்டெல்லையினைக் குறிக்கக் கூடிய பதமாக சுதந்திரம் என்ற பதத்தினை உருவாக்கினார்கள்.

சுதந்திரம் என்பது உரிமைகள் என்பதுடன் மிகவும் நெருக்கமான உறவினைக் கொண்டதாகும். சுதந்திரம் என்பது வலுவான கட்டாயப்படுத்தல் இல்லாததும், கட்டுப்படுத்துபவர் இல்லாததும் வரையறைகள் இல்லாததுமான நிலையாகும். இங்கு மனிதத் தெரிவுகளே முதன்மையானதாக காணப்படும். மறுபக்கத்தில் கட்டுப்பாடுகள் காணப்படுமாயின் அதற்குரிய ஏற்றுக் கொள்ளக் கூடி நியாயப்படுத்தல் கோரப்படும்.

சுதந்திரத்தின் வகைகள்

சுதந்திரத்தினை பல்வேறு வகையாக வகைப்படுத்தலாம். ஆயினும் பொதுவாக இயற்கைச் சுதந்திரம். சமூகச் சுதந்திரம் ( moral ) எனப்பொதுவாக வகைப்படுத்தலாம்.

இயற்கைச் சுதந்திரம்

இச்சுதந்திரம் மனிதன் தான் விரும்புவதை செய்வதற்கு முழுமையான சுதந்திரத்தினை வழங்குகிறது. அரசின் இயல்பினைப் பொறுத்து இச்சுதந்திரம் நீடித்திருக்க முடியும். எல்லா விலங்குகளும் உலக இயல்புகளுக்கு ஏற்ப வாழவிரும்புகின்றன. ஆகவே மனிதனுடைய வாழ்க்கை முறைமை உலக இயல்புகளுக்கு ஏற்றதாகவே இருக்க வேண்டும்.

ஆனாலும் சுதந்திரம் என்பது சில கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒரு சமுதாயம் நீடித்திருக்கின்றபோது இவ் இயற்கை உரிமை இயல்பாகவே இடைநிறுத்தப்பட்டு விடுகிறது. இயற்கைச் சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகளை நிராகரிப்பதால் இது வலுவிழந்து விடுகிறது. மனித சமூகத்திற்குள் இயற்கைச் சுதந்திரம் மேலோங்க முடியாது. சமூக விலங்குகளுக்குள் மனிதனே சமூக கட்டுப்பாட்டினைப் பயன்படுத்தி வாழ்க்கையினை ஒழுங்குபடுத்துவதற்கு தலைமை தாங்க வேண்டும். ரூசோ ( Rousseau ) மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான். அவன் எல்லா இடத்திலும் சங்கிலியால் விலங்கிடப்படுகிறான் ( Man is born free, he is everywhere in chains ) என்று கூறுகின்றார். இக்கூற்றின் உட்கருத்து மனிதன் சமூக ஒப்பந்தத்;தினால் தனது இயற்கை உரிமைகளை இழந்து விடுகிறான். வரையறுக்கப்பட முடியாத உரிமைகளைப் பெறுவதில் வெற்றியடைகிறான் என்பதாகும்.

சமூக சுதந்திரம்

சமூக சுதந்திரம் என்பது பல்வேறு பகுதிகளைக் கொண்டதாகும். அவைகளாவன தனிப்பட்ட சுதந்திரம், அரசியல் சுதந்திரம், மதச் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், தேசிய சுதந்திரம், சர்வதேச சுதந்திரம் எனப் பல்வேறு பகுதிகளைக் கொண்டுள்ளது. சமூக சுதந்திரமானது மனிதன் சமூக நிறுவனங்களின் அங்கத்துவன் என்ற வகையில் மனிதனின் வாழ்க்கை சுதந்திரத்துடன் தொடர்புடையதாகும்.

தனிப்பட்ட சுதந்திரம்

தனிப்பட்ட சுதந்திரம் என்பது மனிதனது சுயசெயற்பாட்டிற்கான சுதந்திரத்தினைக் குறித்து நிற்கின்றது. இச்சுதந்திரம் தனிப்பட்ட உறவுகளை வாழ்க்கையில் ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஒருவனுக்கு ஏற்படுத்திக் கொடுகின்றது. ப்ளாக் ஸ்டோன் (Black Stone ) என்பவர் தனிப்பட்ட சுதந்திரத்தினை மூன்று வகையாக பிரிக்கின்றார்.

  1. தனிப்பட்ட பாதுகாப்பு:- வாழ்க்கை, தேகாரோக்கியம், நற்பெயர் போன்றவற்றை பாதுகாக்கும் சுதந்திரம்.
  2. தனிப்பட இயங்கும் சுதந்திரம்
  3. தனிப்பட்ட சொத்துக்களை சேகரிக்க, அழிக்க உள்ள சுதந்திரம்

அரசியல் சுதந்திரம்

அரசியல் சுதந்திரம் என்பது அரசின் விவகாரங்களில் பங்குபற்ற மக்களுக்குள்ள அதிகாரமாகும். இது மக்களுடைய குடியுரிமையுடன் தொடர்புடையதாகும். வயது வந்தோர் வாக்குரிமை, நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஏற்பாடுகளின் வழி வெளிப்படுத்தப்படுவதாகவும் இது காணப்படும். அத்துடன் உறுதியான பொதுசன அபிப்பிராயம் உருவாக்கப்படுவதற்கான வழி வகைகளையும் ஏற்படுத்துகிறது. இவ்வகை சுதந்திரங்களைப் பயன்படுத்தி மக்கள் தங்களுடைய அரசாங்கத்தினை மாற்றுவதற்கு, கட்டுப்படுத்துவதற்கு, தடுத்து நிறுத்துவதற்கு சுதந்திரம் பெறுகிறார்கள்.

பொருளாதார சுதந்திரம்

மக்கள் தமது திறமையினைப் பயன்படுத்தி உடலாலோ, நுண்ணறிவினாலோ உற்பத்தியாளனாக அல்லது தொழிலாளியாக பயன்தரக்கூடிய சேவையினை அல்லது தொழிலினை மேற் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தனிப்பட்டவர்கள் வேலையின்மை என்ற பயத்தில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக தொழில் புரியக் கூடியதாக இருக்க வேண்டும். இன்னோர் வகையில் கூறின் விரும்பிய பொருட்களை உற்பத்தி செய்ய, விநியோகம் செய்ய ஒவ்;வொரு தனிப்பட்டவரும் சுதந்திரமுடையவராகும். இது ஜனநாயகத்தினை உருவாக்கவும் தொழிலாளர்கள் கைத்தொழில்சாலைகளின் முகாமைத்துவத்தில் பங்கேற்பதற்குமான சந்தர்ப்பத்தினை உருவாக்குகின்றது. தராண்மை வாதம் சுதந்திரமானதும், போட்டியானதுமான பொருளாதார முறையினை உருவாக்குகின்ற போது சோசலிசம் அரச கட்டுப்பாட்டினையும் தனியார் சொத்துக்களை அரச உடமையாக்குவதையும் உருவாக்குகின்றது.

வீட்டுச்சுதந்திரம்

ஹோப் ஹவுஸ் ( Hob House )என்பவர் வீட்டுச் சுதந்திரம் ( Domestic )சுதந்திரம் தொடர்பாக எடுத்துக் கூறுகிறார். மனிதன் தனது குடும்பத்திலுள்ள மனைவி, பிள்ளைகளுக்கு வழங்குகின்ற கௌரவம், பொறுப்பு என்பவற்றை இது குறித்து நிற்கின்றது. குடும்ப அங்கத்தவர்களைப் பொறுத்தவரை தாங்கள் விரும்பிய திருமணத்தினை செய்து கொள்வதற்கும், தமது குடும்ப அங்கத்தவர்களின் நெறிமுறை, மனவளர்ச்சி அபிவிருத்தியினை தேடுவதற்கான சுதந்திரம் என்பவற்றை இது குறித்து நிற்கின்றது.

தேசிய சுதந்திரம்

இதன் இன்னொரு வடிவம் தேசிய விடுதலையாகும். இது காலனித்துவ மாதிரிகளுடாக அல்லது ஏகாதிபத்திய மாதிரிகளுடாக ஒரு நாடு பிறிதொரு நாட்டினை ஆளுவதை நிராகரிக்கின்றது. தேசிய சுதந்திரம் தேசிய விடுதலைப் போராட்டங்களுடனும், விடுதலை இயக்கங்களுடனும் தொடர்புடையதாகும். உதாரணமாக ஐக்கிய அமெரிக்க 1776 ஆம் ஆண்டும் , பிரான்ஸ் 1789 ஆம் ஆண்டும் சுதந்திரத்தினை பெற்றுக் கொண்டன. வரலாற்று ஆதாரங்களுடாக நோக்குகின்ற போது ஒரு நாட்டின் மீதான ஆழமான அன்பு மனிதர்களது இதயங்களில் இடம் பிடிக்கின்ற போது பல இலட்சம் மக்களின் உயிர்களை பலி கொடுக்கிறது. இதன் மூலம் தாயகத்தின் பாதுகாப்பு, கௌரவம் என்பவற்றை பாதுகாத்துக் கொள்கிறது.

சர்வதேச சுதந்திரம்

சர்வதேச சுதந்திரம் முழு உலகத்தையும் கருத்தில் எடுக்கிறது. சர்வதேச அளவில் யுத்தத்தினை இல்லாதொழித்தல் ஆயுத உற்பத்தியை கட்டுப்படுத்துதல், படை பலம் உபயோகிப்பதை தடுத்தல், சர்வதேச மோதல்களை பசுபிக் உடன்படிக்கையின்படி தீர்த்து வைத்தல் போன்றவற்றிற்கு இச்சுதந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் உலகை சுதந்திரமாக விடவும், படைபல ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும் முடிவதுடன், சமாதான சகவாழ்வினை ஏற்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.

நெறிமுறைச் சுதந்திரம்

நெறிமுறைச் சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் புராதன கால சிந்தனையாளர்களாகிய அரிஸ்டோட்டில், பிளாட்டோ காலத்திலிருந்து நவீன கால சிந்தனையாளர்களாகிய ரூசோ, கான்ட், ஹெகல்,கிரீன் காலம் வரை முன்வைக்கப்படுகிறது. இவர்களின் கருத்துப்படி, ஒவ்வொருவரும் தனக்கேயுரிய ஆளுமையினை விருத்தி செய்யக் கூடிய வழிவகைகளையும் கொண்டுள்ளார்கள். அதே நேரம் ஒவ்வொருவரும் தமக்குரிய இவ் உரிமைகள் மற்றவர்களுக்கும் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். ஒவ்வொருவரும் தனது உண்மைத் தன்மைக்கும் கௌரவத்திற்கும் மதிப்பு கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது போன்று அதனை மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும்.