1 1 1 1 1 1 1 1 1 1 Rating 0.00 (0 Votes)

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.01.12 , 2013.01.13 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image001

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தினை அடைந்த தருணத்தில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களை நிறுத்தி யுத்தநிறுத்த உடன்பாட்டினை ஏற்படுத்த மேற்கு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடனும், தந்திரத்துடனும் தடுத்துள்ளமை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசியத் தகவல்கள் மூலம் வெளிவந்துள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பரபரப்பான இறுதி வாரங்களிலும், நாட்களிலிலும் தமிழீழ விடுதலைப்புலிகளும் இலங்கை அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதிலும், தவிர்ப்பதிலும் கவனம் செலுத்தி யுத்ததில் இறுதி வெற்றியினை அடைவதில் இந்தியா குறியாக இருந்துள்ளது. இதனை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள இறுதி யுத்தத்தில் இந்தியா வகித்த வகிபாகம் தொடர்பான பல இரகசியத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பு

2009ஆம் ஆண்டு தை மாதம் 27ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பிலுள்ள பிரதி இந்தியஉயர்ஸ்தானிகர் விக்ரம் மிஸ்றி (Vikram Misri) இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்தார். பிரணாப் முகர்ஜின் வருகை தொடர்பாக இருபத்திநான்கு மணித்தியாலங்களுக்கு முன்னர்தான் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டது. இலங்கை வந்திறங்கிய முகர்ஜி அலரி மாளிகையில் இரண்டு மணித்தியாலங்கள் ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களைச் சந்தித்து பேச்சவார்த்தை நடாத்தி விட்டு ஏறக்குறைய ஐந்து மணித்தியாலங்களுக்குள் இலங்கையினை விட்டு வெளியேறியிருந்தார். இச்சந்திப்பின் போது 2006ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையடைந்த முன்னேற்றம் தொடர்பாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பிரணாப் முகர்ஜிக்கு எடுத்து விளக்கினார். இது வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைகள் தொடர்பாக மிகவும் வெளிப்படையான கலந்துரையாடலுக்கான வாய்ப்பினை முகர்ஜிக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. மனித உரிமைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகிய இரு விடயங்களை உத்தரவாதப்படுத்துவதே தன்னுடைய தற்போதைய கொழும்பு விஜயத்தின் உண்மையான நோக்கமாகும் என்பதை முகர்ஜி மிகவும் அழுத்திக் கூறியிருந்தார். இவ்வகையில் முகர்ஜி மனிதாபிமான சூழ்நிலைகளுடன் தொடர்புடைய நான்கு விடயங்களை உடனடியாக அமுல்படுத்தும்படி இலங்கை அரசாங்கத்திடம் அழுத்திக் கூறியிருந்தார்.

1. தற்போது வரையறுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயமானது மக்கள் பாதுகாப்பிற்குரிய வலயமாக தொழிற்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் பாதுகாப்பாக நுழையக்கூடிய மனதாபிமான நடைபாதை (Humanitarian Corridor) ஒன்றை இலங்கை இராணுவம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

2. பாதுகாப்பு வலயத்திற்குள் மருத்துவப் பொருட்களுக்கான விநியோகம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை தொடர்ந்தும் திறக்கப்பட்டிருக்க வேண்டும்.

3. வன்னியை விட்டு வெளியேற விரும்புகின்ற பொதுமக்களுக்கான பாதை திறக்கப்பட்டு அது மிகவும் தெளிவாக அடையாளமிடப்படுவதுடன், மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவும் வேண்டும்.

4. மனித அழிவுகளை தவிர்க்கக் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி பொதுமக்கள் நலன் தொடர்பில் முகர்ஜியின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டதுடன், பாதுகாப்பு வலயத்தின் வடகிழக்கு பகுதியிலிருந்து தாக்கும் விடுதலைப்புலிகளை நோக்கி இராணுவம் எறிகணைத் தாக்குதல்களை நடத்துகின்றதாயினும் இப்பகுதிக்குள் பொதுமக்கள் நுழைவதை அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். அதேநேரம் அண்மைக்காலங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் செய்தியும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் ஏறக்குறைய 50 பொதுமக்கள் நாளாந்தம் இறக்கின்றார்கள், இதனைவிடக் கூடிய எண்ணிக்கையானவர்கள் காயப்படுகின்றார்கள். ஒருசில விடுதலைப்புலிகள் இறக்கலாம் ஆனால் அனேகமானோர் பொதுமக்களேயாகும் என யுத்த வலயத்திற்குள்ளிருந்த ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய , பிராந்திய பாதுகாப்பு

இலங்கையினை விட்டு முகர்ஜி புறப்படுமுன் வெகுஜனத் தொடர்புசாதனங்களுக்கு விடுத்த அறிக்கையில் “இலங்கையில் அண்மைக்கால அபிவிருத்தியை கவனத்தில் கொண்டுள்ளோம். பரஸ்பரநலன், பிராந்திய விடயங்கள் உட்பட இலங்கை இந்திய உறவின் முழுவிடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. இலங்கை இந்திய உறவு பலமாக அபிவிருத்தியடைகின்றது. இலங்கை ஜனாதிபதி இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கான நம்பிக்கையினை கொண்டுள்ளார். எல்லா இலங்கையர்களும் குறிப்பாக மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்மக்களும் மிகவிரைவில் அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பக்கூடிய சூழ்நிலையினை உருவாக்க இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் எல்லோரும் பணியாற்றவுள்ளோம். இலங்கை அரசாங்கம் மோதலினால் தமிழ் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கவும், பாதுகாப்பு வலயங்களை மதிக்கவும் உத்தரவாதம் தந்துள்ளது.”

பிரணாப் முகர்ஜி இலங்கையில் வெளியிட்ட அறிக்கை ஒருவிடயத்தினை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியது. அதாவது இலங்கையில் நிகழும் யுத்தத்தினை இந்தியா எதிர்க்கவோ தடுக்கவோ போவதில்லை. இலங்கை இராணுவம் அடையப்போகும் இராணுவ வெற்றியின் மூலம் இலங்கை முழுவதிலும் குறிப்பாக வடமாகாணத்தில் முப்பது வருடங்களின் பின்னர் இயல்பு வாழ்க்கையினை மீண்டும் தோற்றிவிப்பதற்குக் கிடைத்த அரசியல் சந்தர்ப்பமாகும். இந்தியாவினதும், இலங்கையினதும் இறுதி விருப்பம் இதுவேதான். இதன் மூலம் இந்தியா தனக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏற்படக் கூடிய தேசிய, பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தலை இலங்கை இராணுவத்தினைப் பயன்படுத்தி இல்லாதொழித்துள்ளது.

இறுதிநேர முயற்சி

2009ஆம் ஆண்டு சித்திரை மாதம் 15ஆம் திகதி ஐக்கிய அமெரிக்க உயர்ஸ்தானிகருடன் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் கலந்து கொண்ட கூட்டத்தில் இலங்கையின் வடமாகாணத்தில் நிகழும் யுத்தம் தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் நிகழ்ந்த கலந்துரையாடல் தொடர்பாகத் தெரிவித்த விடயங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அதில் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் நிகழ்த்தும் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை தலையீடு செய்யவோ அல்லது யுத்த நிறுத்தம் செய்ய முயற்சிக்கவோ தேவையில்லை. இலங்கைக்கு ஆலோசனை வழங்கும் சூழல் இப்போது கைநழுவிச் சென்றுவிட்டது. ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் கடும்போக்காளர்கள் தவிர்ந்த ஏனையோர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு மட்டும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கலாம். இதற்கு இலங்கை அரசாங்கத்தினை இணங்கிவரச் செய்யமுடியும். ஆனால் இதனைச் செய்வதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதுடன் எவ்வகையில் இதனைச் செய்வது என்பதும் பிரதான பிரச்சினையாகவுள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.

ஆயினும் இந்திய அரசாங்க அமைச்சரவை இராணுவ நடவடிக்கையினை நிடைநிறுத்தி யுத்த வலயத்திற்குள் அகப்பட்டுள்ள பொதுமக்களின் பதட்டத்தினைத் தணித்து ஆறுதல் வழங்கும்படி சிவசங்கர் மேனன், மற்றும் நாராயணன் ஆகியோரை கொழும்பிற்கு அவசரமாக அனுப்பி கேட்டுக் கொண்டது. இதனை இலங்கை ஜனாதிபதி தனது அமைச்சர்களுடன் ஆலோசித்த பின்னர் பத்து கிலோமீற்றர் சுற்றுவட்டத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அகப்பட்டுள்ளனர். எனவே இறுதி முடிவு எட்டப்படும் வரை யுத்தத்தினை இடைநிறுத்த முடியாது என அறிவித்துக்கொண்டார்.

ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் இறுதி நேரத்தில் பேச்சுவார்த்தை நிகழுமாயின் அதனை இந்திய அரசாங்கம் எதிர்க்காது என்ற ஊகத்தினடிப்படையில் வன்னயில் நிகழும் மோதலை சுமூகமானதொரு நிலைக்குக் கொண்டுவர முடியும் என நம்பியதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இந்தியா உட்பட ஏனைய அரசுகளின் பங்குபற்றுதலுடன் பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்க முடியும் என நம்பியது. மூன்று வாரங்கள் கழித்து இலங்கைக்கான பிரித்தானிய விசேட தூதுவர் வைகாசிமாதம் 6ஆம், 7ஆம் திகதிகளில் புதுடெல்லிக்கு விஜயம் செய்து இலங்கை அரசியல் தொடர்பிலும்,மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பிலும் இணைந்து செயற்படுவது தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது பிரபாகரனுடன் பேசுவது யார் என்றதொரு கேள்வியை சிவசங்கர் மேனன் எழுப்பியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் கணிப்பின் படி இடப்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் சிலர் பிரபாகரனுடனும் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனியுடனும் தொடர்பில் இருக்கின்றார்கள். ஆனால் இங்குள்ள பிரச்சினை யாதெனில் இவர்கள் பிரபாகரனுடன் நேரடியாகப் பேசக்கூடிய வல்லமையுள்ளவர்களா? என்பதேயாகும். சிவசங்கர் மேனன் உட்பட பலரிடம் பிரபாகரன் தான் சந்திக்கப் போகின்ற யுத்த சூழ்நிலையினை புரிந்து வைத்துள்ளார் என்ற அபிப்பிராயமும் இருந்துள்ளது. மேலும் பாதுகாப்பு வலயத்திலிருந்து பாதுகாப்புத்தேடித் தப்பியோடும் தமிழ் மக்களைத் தனித்திருந்து பாதுகாக்கும் வல்லமை குறைந்தவராக பிரபாகரன் உள்ளார். ஆகவே தமிழீழ விடுதலைப்புலிகள் பிரபாகரனின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தமது உயிரைப் பணயம் வைத்துத் தமது இறுதி அழிவினைச் சந்திப்பார்கள் என்ற கருத்து இந்தியாவிடம் இருந்துள்ளது.

இந்தியஉயர்ஸ்தானிகர் விக்ரம் மிஸ்றி இலங்கையின் உள்நாட்டு அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக இந்தியாவின் கணிப்பீட்டினை இராஜதந்திரிகளுக்குப் பின்வருமாறு விளக்கியிருந்தார். “வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான சிக்கல் தொடர்பில் புதுடெல்லி கவலை கொண்டுள்ளது. தமிழ் மக்களுக்கு ஏற்படக் கூடிய உயர்மட்டத்திலான பாதிப்பினால் தமிழ்நாடு மாத்திரமன்றி இந்தியா முழுவதும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. எனவே வைகாசி மாதம் 13ஆம் திகதி தமிழகத்தில் நிகழப்போகும் சட்டசபைத் தேர்தலினால் இந்தியா அரசியல் அழுத்தத்திற்குள்ளாகி இருப்பதால் யுத்தமுனையில் இருக்கும் இலங்கை இராணுவத்தின் வேகத்தினை யாரும் விரும்பினால் தணிக்க முடியும் என இந்தியா தெரித்தது. ஆனால் வைகாசி மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துக் கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளை இடைநிறுத்தாது இறுதி வெற்றி கிடைக்கும் வரை யுத்தத்தினைத் தொடர விரும்பிய இந்திய அரசாங்கம் யுத்தவலயத்திற்குள் பொதுமக்கள் சிக்கக் கூடிய ஆபாயம் இருப்பதாக பல தடவைகள் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன், அதனைத் தடுப்பதற்குச் செய்யக் கூடிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு வலியுறுத்தி வந்தது. ஏனெனில் பொதுமக்களுக்கு எற்படக்கூடிய எல்லாவகையான பாதிப்புக்களும் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையினை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிதியினை சர்வதேசரீதியில் திரட்டுவதில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தும் என்பதை இந்தியா முன்னுணர்ந்து இவ் ஆலோசனையினை வழங்கியிருந்தது.

இந்தியாவின் இலக்கு

வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இந்தியா நியாயம் கூறிக் கொண்டிருந்தது மாத்திரமன்றி இலங்கை இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்புக்கள் தொடர்பாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் நியாயம் கூறிக் கொண்டிருந்தது. அதேநேரம் யுத்தத்தினை நிறுத்துவதற்கு மேற்குலக நாடுகள் மேற்கொண்ட எல்லாச்செயற்பாடுகளையும் ஆதரிக்காமல் தந்திரமாக அவற்றைத் தடுத்து நிறுத்தியுமிருந்தது. இதற்காக இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடையும் இறுதிக்காலப்பகுதியில் புதுடெல்லி உலகின் நாலாபக்கமும் செயற்பட்டு யுத்தத்திற்கு ஆதரவு திரட்டியுள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையின் பொருளாதாரத்தினை தரமுயர்த்துவதற்கான செயற்பாடுகளிலிருந்து சர்வதேச நாடுகள் தமாகவே விலகிக்கொண்டதுடன், இப்பணி இந்தியாவுடன் சேர்த்து இறுக்கிக் கொள்ளப்பட்டது. அதேநேரம் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை முன்வைக்க இலங்கை அரசாங்கத்தினை தூண்டக் கூடிய பொறிமுறையினையும் இந்தியா உருவாக்கவில்லை. ஏனெனில் இலங்கை அரசாங்கம் யுத்தத்திற்குப் பின்னர் எடுத்துக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக இந்தியாவிற்கு எவ்வித அக்கறையும் இருக்கவில்லை. இந்தியாவினைப் பொறுத்தவரை இலங்கையை தமிழீ விடுதலைப் புலிகள் பூரணமாக இல்லாதொழிக்கப்பட்ட ஒரு நாடாகப் பார்ப்பதே அதன் ஒரே குறிக்கோளாக இருந்துள்ளது எனலாம்.