Education is the Most Powerful Weapon Which You Can Use to Change the World. – Nelson Mandela-

திட்டமிடல் - 3.2 out of 5 based on 16 votes
1 1 1 1 1 1 1 1 1 1 Rating 3.22 (16 Votes)

 

திட்டமிடல் என்ற பதமானது Prevoyance என்ற பிரான்ஸிய பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் முன்னோக்கிப் பார்த்தல் (Looking Ahead)என்பதாகும். இன்னொரு வகையில் கூறின் திட்டமிடல் என்பது செயல்கள் அல்லது நடத்தைகளை மேற்கொள்வதற்குரிய தயார் நிலை எனலாம். பொது நிர்வாகவியலில் ஒழுங்கமைப்பு, ஆட்சேர்ப்பு போன்ற யாவும் திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்படுவதினால்; இதனை எதிர்காலச் செயலுக்குத் தற்போது கையிருப்பிலுள்ள மக்கள் சக்தி, மூலப் பொருட்கள் என்பவற்றைச் சிக்கனமாகவும், திறமையாகவும் பயன்படுத்திப் பூரணத்துவம் பெறுவதற்கு உதவி புரியும் நிகழ்ச்சி நிரல் எனவும் கூறிக் கொள்ளலாம்.

திட்டமிடல் என்ற எண்ணக்கரு பொதுவுடமைக் கோட்பாட்டிலிருந்து பொது நிர்வாகவியலுக்குப் பெறப்பட்டதாகும். இப்பதம் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலகின் பலபாகங்களிலும் பிரபல்யமடையத் தொடங்கியது. முறையான ஒரு திட்டமிடல் இன்றி நிர்வாக ஒழுங்கமைப்பும் திறமையாக செயற்பட முடியாது. திட்டமிடல் என்றால் என்ன? பொது நிர்வாகவியலில் இதன் பெறுமதி என்ன? என்பது தொடர்பாக பல அறிஞர்கள் கருத்துக் கூற முற்படுகின்றார்கள். டிமொக், டிமொக் (Dimock and Dimock ) என்பவர் 'அரசாங்க நிர்வாகத்தின் ஒவ்வொரு செயற்பாடும் திட்டமிடப்பட்டேயாக வேண்டும். அதாவது நோக்கங்கள், செயற்பாடுகள், ஒழுங்கமைப்புக்கள், நிதி, மேற்பார்வையிடுபவர்களுக்கான பொறுப்புக்கள், செயற்பாட்டு செயல் முறை இடைக்கால கொடுப்பனவு முறை, பொதுத் தொடர்பு, போன்ற அனைத்தும் திட்டமிடப்படல் வேண்டும்' என்கின்றார். எல்.டி. வைட் (L. D. White) என்பவர் 'முன்னரே ஒப்புக் கொண்ட ஒரு கொள்கையை நிறைவேற்றவும், செயற்படுத்தவும் எடுக்கப்படும் உறுதியான நடவடிக்கைகளே திட்டமிடலாகும்' என்கின்றார். பிப்னர் (Pfifner) என்பவர் 'கொள்கை, திட்டமிடல் என்பவைகள் இரண்டும் வேறுபட்டதல்ல, இவையிரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளவையேயாகும்'. எனக்கூறுகின்றார். திட்டமிடலை கலோவே (Galloway)என்பவர் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறுகின்றார்.

  1. கொள்கைகளை முடிவு செய்தல் வேண்டும்.
  2. கொள்கைகள் குறித்துத் தகவல்களை திரட்டி ஆய்வு செய்து அது தொடர்பாக எழும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  3. பின்னர் அப்பிரச்சினைகள் குறித்து எழும் மாற்று விளக்கங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
  4. இம் மாற்று விளக்கங்களில் சிறப்பானதாகத் தோன்றுவதை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் திட்டங்களை வகுக்க வேண்டும். என்கின்றார்

இதேபோல மிலற் என்பவர் திட்டமிடல் பின்வரும் நடைமுறைகளைக் கொண்டிக்க வேண்டும் எனக் கூறுகின்றார்.

  1. குறிக்கோள்களை உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
  2. அக்குறிக்கோள்களை செயலுருவாக்கும் வகையில் மேற்கொள்ளும் சாதனங்களையும், வளங்களையும் மதிப்பீடு செய்தல்
  3. செயல் நிகழ்ச்சி முறையை தயார் செய்து அதன் உதவியோடு குறிக்கோள்களை அடையும் திட்டங்களை மேற்கொள்ளுதல் வேண்டும். என்கின்றார்.

எனவே திட்டமிடலின் பண்புகளை பின்வருமாறு பட்டியல்படுத்திக் கூறலாம்.

  1. பௌதீகத் திட்டமிடல்
  2. சமூக பொருளாதார திட்டமிடல்
  3. நிர்வாகத் திட்டமிடல்

திட்டமிடல் பல்வகைப்பட்ட இயல்புகளையுடையதாயினும், திட்டமிடலின் பொதுவான இயல்புகளின் அடிப்படையில் அதனை மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்து அணுக முடியும்.

1. உயர் மட்ட நிர்வாகத் திட்டமிடல் :-

திட்டமிடலானது அரசாங்கத்துடன் தொடர்புபடுகின்ற எல்லாத் திணைக்களங்கள், அவற்றின் பகுதிகள், அமைப்புக்கள், யாவற்றையும் உள்ளடக்கி உருவாக்கப்படுவதாகும். இவைகள் தங்களுக்கென்று நிர்வாகத் தலைவரை கொண்டிருக்க வேண்டும். இத்தலைவர்கள் மந்திரிசபை உறுப்பினர்களின் வழி நடத்தலின் கீழ் செயற்பட வேண்டும். உயர் மட்ட நிர்வாக திட்டமிடல்கள் திணைக்களத் தலைவர்களின் கருத்துக்கள் ஆலோசனைகளுடன் மந்திரி சபை உறுப்பினர்களால் உருவாக்கப்படுகின்றது.

2. தேசிய சமூக , பொருளாதார திட்டமிடல் :-

இத்திட்டமிடல் ஒரு நாட்டின் முழு பொருளாதார நடத்தைகளையும் உள்ளடக்கியதாக காணப்படும். ஒவ்வொரு நாடும் தனது தேசியப் பொருளாதாரத் திட்டமிடலுக்கான இலக்குகளை வைத்திருக்கின்றது. இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். திட்டமிடல்கள் தீவிரமான சமூக மாற்றத்தினை இலக்காக கொண்டு செயற்படல் வேண்டும். எம். எல். செத் (M.L.Seth)என்பவர் தேசிய பொருளாதாரத் திட்டமிடலை முழு அளவிலான திட்டமிடல், பகுதியளவிலான திட்டமிடல் என இரண்டாக வகுத்துக் காட்டுகின்றார்.

3. செயற்பாட்டுத் திட்டமிடல் :-

செயற்பாட்டு திட்டமிடல் நிர்வாக செயற்பாடுகளுடன் தொடர்புபட்டதாகும். உள்நிர்வாக ஒழுங்கமைப்பு செயற்பாடுகளுடன் தொடர்புபட்டே செயற்பாட்டுத் திட்டமிடல் உருவாக்கப்படல் வேண்டும். அமைப்பின் ஒவ்வொரு பகுதியும் என்ன செய்ய வேண்டும் என்பது திட்டமிடப்படல் வேண்டும். கொள்கைகள், இலக்குகள் என்பன அமைப்பின் ஒவ்வொரு பகுதியுடனும் இசைவடைந்து படிப்படியாக செயற்பாடு நோக்கி செல்லுதல் வேண்டும்.

திட்டமிடல் தொடர்பான இம் மூன்று வகைப்பாடுகளை விட, வேறு சிலர் பின்வருமாறு இதனை வகைப்படுத்துகின்றனர்.

  1. கொள்கைத் திட்டமிடல்
  2. நிர்வாகத் திட்டமிடல்
  3. நிகழ்ச்சித் திட்டமிடல்
  4. செயற்பாட்டுத் திட்டமிடல்
  5. பிராந்திய திட்டமிடல்
  6. மைய, பரவலாக்க திட்டமிடல்
  7. தொழிற்பாட்டுத் திட்டமிடலும், அமைப்புத் திட்டமிடலும்.

திட்டமிடல் என்பது தானாகவே நிர்வாக விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்றி விடாது. கொள்கை வகுப்பாளர்கள் தமது இலக்கினை நிறைவேற்றிக் கொள்ளப் பயன்படுத்தும் ஒரு கருவியே திட்டமிடலாகும். ஒரு நாட்டில் திட்டமிடல் வெற்றியளிக்க வேண்டுமாயின் அரசியல் உறுதிப்பாடு என்பது மிகவும் முதன்மையானதாகும். அதனையடையாத வரையில் எந்தவொரு நாட்டினதும் திட்டமிடலும் வெற்றியளிக்காது. எனவே திட்டமிடல் என்பது முடிவு எடுக்கப்பட்ட கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு தேவையான, முறையான சாதனங்களைக் கொடுக்கும் ஓர் உபகரணமேயாகும். எனவே அரசாங்க நிர்வாகத்தின் ஒவ்வொரு அம்சமும் திட்டமிடப்பட்டேயாக வேண்டும்.

Share

Who's Online

We have 74 guests and no members online

+1 Me

Subscribe

Enter your email address:

Delivered by FeedBurner

 About Prof. Thanabalasingam Krishnamohan

Prof. Thanabalsingam Krishnamohan is a Professor in Political Science in Eastern University of Sri Lanka .